(எம்.ஆர்.எம்.வஸீம்)

பிணைமுறி தொடர்பான மத்திய வங்கியின் தடயவியல் அறிக்கை ரணில் விக்ரமசிங்கவை தூய்மைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதொன்றாகும்.

இந்த அறிக்கைக்கு எந்தவித சட்ட அங்கீகாரமும் இல்லை. அதனால் இதில் தெரிவிக்கப்படும் பரிந்துரைக்கமைய யாருக்கு எதிராகவும் வழக்கு தொடுக்க முடியாது என ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற பிணைமுறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான ரணில் விக்ரமசிங்கவுக்கு வழக்கு தொடுக்கப்படவில்லை.

இந்த மோசடி அன்றைய அரசாங்கத்தின் அமைச்சரவையின் அனுமதியுடனே இடம்பெற்றுள்ளது. அன்றிருந்த கோப்குழு உறுப்பினர்களும் இதற்கு தொடர்பு பட்டிருந்தனர்.

அதனால்தான் கோப்குழு விசாரணையின்போது அடிக்குறிப்பு எழுதினார்கள். ஆனால் மத்திய வங்கி மோசடி தொடர்பில் இன்று அலோசியஸ் மற்றும் பலிஹேனவுக்கும் மாத்திரமே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அனைவரும் இதில் பணம் பெற்றுள்ளனர்.

அத்துடன் எந்த காலத்தில் மோசடி இடம்பெற்றிருந்தாலும் அதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.