(இராஜதுரை ஹஷான்)

புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே சம்பந்தனும், சுமந்திரனும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா விவகாரத்தில் இவர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. என தெரிவித்த   தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன்  யாப்பா அபேவர்தன,

அரசியல் தீர்வு குறித்து கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வை  வழங்குவதாக குறிப்பிட்டு ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.  இனங்களுக்கிடையில் முரண்பாடற்ற தீர்மானங்களை மாத்திரமே முன்னெடுப்போம் என்றார்.

ஊடக அமைச்சில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இராணுவ தபளதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயண தடை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்  சம்பந்தன் மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரன்  குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கவை.

உலகில் தடை  செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பினை இல்லாதொழிக்க அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு இராணுவ தளபதி பாரிய பங்களிப்பு வழங்கினார்.

எதிர்வரும்  மாதம்  ஜெனிவாவில் இடம் பெறவுள்ள இலங்கை தொடர்பான கூட்டத்தொடரினை இலக்காகக் கொண்டே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் செயற்பாடுகள்ஒருதலை பட்சமானது என்பதை வெளிவிவகார அமைச்சு கடுமையாக எதிர்த்துள்ளதுடன் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நெருக்கடி நிலைமையினை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் வெற்றிக் கொள்ளும் என அவர் தெரிவித்தார்.