கழுத்து வலியால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். அதிலும் உறங்கும்போது தலையணையை தாறுமாறாகவும், தங்களுக்கு சௌகரியமாகவும் பயன்படுத்துவதால் கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

இந்நிலையில் கழுத்து வலிக்கும், அவர்கள் பயன்படுத்தும் தலையணைக்கு தொடர்பு உண்டு என்று இயன்முறை மருத்துவம் தெரிவிக்கிறது. தலையணை ஒருவரது உறக்கத்திற்கு தேவைப்படும் முக்கியமான கருவி.

 இந்த கருவியினை பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் தலையணையை சரியான நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். தோள்பட்டை பகுதிக்கும், தலைக்கும் இடைப்பட்ட உயரத்திற்கு ஏற்ற வகையில்தான் தலையணையின் உயரம் இருக்கவேண்டும். இதற்கு நேர்மாறாக உயரமான தலையணை இருந்தாலோ அல்லது உயரம் குறைந்த தலையணை இருந்தாலோ கழுத்து பாதிக்கப்படுவது உறுதி. அதே போல் கழுத்திற்கு ஆதரவாக கைகளை வைத்துக் கொண்டு உறங்கு வதும் வலியை எற்படுத்தும்.  

கழுத்திலுள்ள தசைகள் சிறிய தசைகள் என்பதால் வலி ஏற்பட்டவுடன் அதனை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து நீவி விடுவதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். ஏனெனில் இதன் காரணமாகவே வலி அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உண்டு. அதேபோல் கழுத்தை இடப்பக்கமும் அல்லது வலது பக்கமும் சாய்த்து உறங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

உடலின் இயல்பு நிலைக்கு மாறாக கழுத்தை திருப்பினால் கழுத்து எலும்பு மற்றும் தசை பாதிக்கப் பட்டு கழுத்து வலி ஏற்படக்கூடும். கழுத்து வலி ஏற்பட்ட பிறகு வைத்திய பரிசோதனை செய்து கொண்டு, இயன்முறை வைத்தியத்தின் மூலம் பயிற்சிகளைத் தொடர்ந்தால் கழுத்து வலிக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும்.