இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

கடந்து செல்லும் ஒவ்வொரு போட்டிகளிலும் கிரிக்கெட் சாதனைகளை முறியடிக்கும் கோலி, சமூக வலைத்தளத்தையும் அதிகம் பின்பற்றுகிறார். 

31 வயதான அவர் இதுவரை இன்ஸ்டாகிராம் தளத்தில்  930 பதிவுகளை பகிர்ந்துள்ளதோடு, அவரது சமூக வலைத்தள பதிவுகள்  தொடர்ந்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, அவரது இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ கணக்கில் அதிக  எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்கள் உள்ளனர். கோலிக்கு முன்னதாக போர்த்துக்கல்லை சேர்ந்த  கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 49.9 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்திலும் மற்றும் 44.1 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் தீபிகா படுகோனே மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு, எம்.எஸ். டோனியை விஞ்சி கோலி மிகவும் வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றார்.

தற்போது கோலி நியூசிலாந்தில் உள்ளார். பிப்ரவரி 21ம் திகதி, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நடக்கவுள்ளது.