பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­ப­ளத்தை வழங்கும் விட­யத்தில் அர­சாங்கம் உறு­தி­யாக உள்­ள­தா­கவே தெரி­கின்­றது. ஆனாலும் இந்த சம்­பளம் வழங்­கப்­படும் விடயம் தொடர்பில் தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் அர­சாங்­கத்­துக்­கு­மி­டையில் இன்­னமும் பூரண இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்­லையோ என்ற சந்­தேகம் எழுந்­தி­ருக்­கின்­றது.

ஏனெனில், 1000 ரூபா நாளாந்த சம்­பளம் வழங்­கு­வது தொடர்­பான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கடந்த 13ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வி­ருந்­தது. அந்த முத்­த­ரப்பு உடன்­ப­டிக்கை கைச்­சாத்­திடும் நிகழ்வு இறுதி நேரத்தில் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மா­கவே 1000 ரூபா சம்­பள கொடுப்­ப­னவு மார்ச் மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து கிடைக்­குமா, அதற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­னவா என்ற கேள்வி எழுந்­தி­ருந்­தது.

கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்கப் பிர­தி­நிதிகள், பெருந்­தோட்டக் கம்­ப­னி­களின் பிர­தி­நி­திகள், அர­சாங்கத் தரப்­பினர் என முத்­த­ரப்­பி­னரும் இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது.  தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எதிர்­வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் குறைந்­த­பட்ச நாளாந்த சம்­பளம் 1000 ரூபா வழங்­கப்­படும் வகை­யி­லேயே இந்த ஒப்­பந்­தத்­துக்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இந்த விடயம் தொடர்பில் பெருந்­தோட்ட கம்­ப­னி­க­ளின பிர­தி­நி­தி­க­ளுக்கும் அர­சாங்கப் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. இத­ன­டிப்­ப­டை­யி­லேயே இந்த ஒப்­பந்­தத்­துக்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

முத்­த­ரப்பு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டாமை தொடர்பில் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.  பெப்­ர­வரி மாதம் 13ஆம் திகதி 1000 ரூபா சம்­ப­ளத்தை வழங்­கு­வ­தற்­கான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வி­ருந்­தது. எனினும் சில சரத்­துக்கள் தொழி­லா­ளர்­க­ளுக்கு பாத­க­மாக இருந்­ததால் அவற்றில் திருத்தம் மேற்­கொள்­ளு­மாறு பணித்­துள்ளேன். இதன் கார­ண­மா­கவே ஒப்­பந்தம் கைச்­சாத்­திடும் நிகழ்வு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விட­யத்தில் நாம் ஓடி ஒளி­ய­வில்லை. எது எப்­ப­டி­யி­ருந்­தாலும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல்  1000 ரூபா கிடைப்­பது உறுதி என்று அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 50 ரூபா­வை­யேனும் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு 1000 ரூபா தொடர்பில் பேசு­வ­தற்கு எவ்­வித அரு­க­தையும் கிடை­யாது. எமது மக்­க­ளுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழியின் பிர­காரம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நிச்­சயம் 1000 ரூபா பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜபக் ஷ அர­சி­யல்­வாதி கிடை­யாது. அவர் சிறந்த நிர்­வாகி. எனவே அவர் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றுவார் என்றும் அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்றே மார்ச் மாதம் முதலாம் திகதி முதல்  1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­படும் என்று அர­சாங்க அமைச்­சர்கள் பலரும் கருத்­து­களை தெரி­வித்து வரு­கின்­றனர். இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்­தினம் கருத்து தெரி­வித்­துள்ள பெருந்­தோட்ட பயிர்ச்­செய்கை விவ­சாய ஏற்­று­மதி அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரன பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­ப­ளத்தை வழங்க எமது புதிய அர­சாங்­கத்­தி­னூ­டாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை வெற்­றி­ய­ளித்­துள்­ள­தோடு வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டதைப் போல் 1000 ரூபா சம்­பளம் நிச்­ச­ய­மாக பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்று தெரி­வித்­தி­ருக்­கிறார்.

மலை­யக மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டிய அனைத்து உரி­மை­க­ளையும் வழங்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ

பக் ஷ, பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் தலை­மை­யி­லான அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. இதற்­காக பெருந்­தோட்­டத்­துறை அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஆறு­முகன் தொண்­ட­மா­னுடன் இணைந்து அதி­யுச்ச ஒத்­து­ழைப்பை வழங்­குவேன் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

அமைச்­சர்­க­ளான ஆறு­முகன் தொண்­டமான் மற்றும் ரமேஷ் பத்­தி­ரன ஆகியோர் மார்­ச் மாதம் முதலாம் திகதி முதல் 1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­படும் என்று உறு­தி­ய­ளித்­துள்­ளமை ஆறு­த­ல­ளிக்கும் விட­ய­மா­க­வுள்­ளது. ஆனாலும் இந்த கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொ­டுக்கும் விட­யத்தில் விட்­டுக்­கொ­டுப்­பு­களை மேற்­கொள்­ளாது இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் செயற்­ப­ட­வேண்­டி­யது தற்­போ­தைய நிலையில் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

ஏனெனில், சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பான பல்­வேறு வாக்­கு­று­திகள் கடந்த காலங்­களில் காற்றில் பறக்­க­வி­டப்­பட்ட வர­லா­றுகள் உள்­ளன. கடந்த நல்­லாட்சி அர­சாங்க காலத்தில்  1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தப்­பட்டு வந்­தது. கடந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போதும் 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­படும் என்று வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆனால், கடந்த வருடம் கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­போது வெறும் 750 ரூபா கொடுப்­ப­னவே தோட்­டத்­தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தது. அதன் பின்னர் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் அழுத்­தத்தின் கார­ண­மாக மேல­தி­க­மாக நாளாந்தம் 50 ரூபா கொடுப்­ப­னவு வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­போ­திலும் அந்தக் கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­ட­வில்லை. இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் இதற்­கான தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன.

அர­சாங்கம் தேயிலை சபை­யுடன் இணைந்து இந்தக் கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்படும் என்று உறுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் இதனை வழங்­கு­வ­தற்கு மீண்டும் முயற்­சிக்­கப்­பட்­டது. ஆனால், இறு­தி­ வ­ரைக்கும் அந்தக் கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­ட­வில்லை.

1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­பட வேண்டும் என்று பல வரு­டங்­க­ளா­கவே தோட்டத் தொழி­லா­ளர்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்­டனர். மலை­யக இளைஞர், யுவ­தி­களும் இந்தப் போராட்­டங்­களை நடத்தி வந்­தனர். கடந்த வருடம் கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் மாபெரும் கறுப்­புச்­சட்டைப் போராட்­டமும் இடம்­பெற்­றி­ருந்­தது. ஆனாலும் இன்­று­வரை அந்த 1000 ரூபா கொடுப்­ப­னவு என்­பது மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு  எட்­டாக்­க­னி­யா­கவே இருந்து வரு­கின்­றது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட கோத்­த­பாய ராஜபக் ஷ தான் பத­விக்கு வந்தால் நாளாந்த சம்­ப­ள­மாக 1000 ரூபா வழங்­கப்­படும் என்று உறுதி வழங்­கி­யி­ருந்தார். அந்த உறு­தி­மொ­ழியை நிறை­வேற்றும் வகையில் தைப்­பொங்கல் தினத்­துக்கு முன்­தினம் 1000 ரூபா­வுக்­கான அறி­விப்பை அவர் வெளி­யிட்­டி­ருந்தார். ஆனாலும் தோட்டக் கம்­ப­னிகள் நாளாந்தம் 1000 ரூபா சம்­ப­ளத்தை வழங்­கு­வ­தற்கு முதலில் பின்­ன­டித்­தி­ருந்­தன. ஆனாலும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு தற்­போது குறிப்­பி­டத்­தக்­க­ளவு இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­ற­போ­திலும் அந்த விடயம் இன்னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

கடந்த 13ஆம் திகதி இந்த விடயம் தொடர்­பான முத்­த­ரப்பு ஒப­்பந்தம் கைச்­சாத்­தி­டப்பட்­டி­ருந்தால் சம்­பள உயர்வு தொடர்­பான விட­யத்தில் மக்கள் மத்­தியில் நம்­பிக்கை துளிர்­விட்­டி­ருக்கும். ஆனால், ஒப்பந்தமும் செய்யப்படாத நிலையிலேயே தற்போது வரை அரசாங்கத் தரப்பு சம்பள விடயம் தொடர்பில் உறுதிமொழிகளை வழங்கி வருகின்றது.

இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியாக இருந்தால் மட்டுமே மார்ச் மாதம்  முதலாம் திகதி முதல் 1000 ரூபா சம்பளத்தினை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும். இந்த விடயம் தொடர்பில் தோட்டக் கம்பனிகளும் தொழிற் சங்கங்களும் அரசாங்கமும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர வேண்டியது தற்போதைய நிலையில் அவசியமாகவுள்ளது.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குறைந்த வருமானத்துடன் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பெரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். விலைவாசி அதிகரிப்பைத் தாங்கமுடியாது அவர்கள் துன்பப்படுகின்றனர். எனவே இம்முறை அந்த மக்கள் ஏமாற்றப்படக்கூடாது. நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட்டேயாக வேண்டும். இதற்காக அனைத்து தரப்பினரும் பாடுபடவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

(18.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )