திருடர்களை பிடிக்கப்போவதாக  கூறிய நிலையில்  தற்போது திருடர்கள்  அரசாங்கத்தை பிடித்துக் கொண்டுள்ளார்கள்.  ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில் நாட்டு  மக்களின் நிலை என்ன? மக்கள் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன்  இந்த அரசாங்கத்தை உருவாக்கிய மக்களுக்கே  இந்த அரசாங்கம் தாக்குதல் நடாத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின்  காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) மாவட்ட இனைப்பாளர் நடேசன் சுந்தரேசன் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே  நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர்,

தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் நாட்டு  மக்கள் பாரிய பிரச்சினைக்குள்  தள்ளப்பட்டுள்ளனர். 

அதேவேளை, அரசாங்கமும் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளது உண்மையில் இந்த அரசாங்கத்தை உருவாக்கிய மக்களுக்கே  இந்த அரசாங்கம் தாக்குதல் நடாத்துகின்றது . இந்த  அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களிக்க காரணம்  நாட்டு மக்களுக்கு வாழ்வதற்கு , பாதுகாப்பான ஒரு நாடு தேவை என்பதனால் தான்.

எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியானது துஸ்பிரயோகங்கள்  நிறைந்த ஆட்சியாகவும்,  திருடர்களை கொண்ட அரசாங்கமாகவுமு்  இருப்பதால்  ஆட்சியினை எங்களுக்கு தாருங்கள் இவற்றை இல்லாது ஒழிப்போம் என இந்த அரசாங்கம்  உத்தரவாதம் அளித்தது.

விசேடமாக  மத்திய வங்கி  ஊழலுடன்  சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதாக  தெரிவித்து ஆட்சிக்கு வந்தது ஆனால் தற்போது அரசியல் வாதிகள் கதைக்க முடியாத முக்கிய விடயமாக மத்திய வங்கி ஊழல் இருக்கின்றது .  

அரசாங்கம் திருடர்களை பிடிக்கப்போவதாக   கூறிய நிலையில்  தற்போது திருடர்கள்  அரசாங்கத்தை பிடித்துக் கொண்டுள்ளார்கள்,  பிடியாணை   பிறப்பிக்கப்பட்டவர்கள்  வந்து சரணடைகிறார்கள் , சரணடைந்தவர்கள் ஓரிரு நாட்கள்  விளக்கமறியலில் வைக்கப்படுகிறார்கள் அதன்பின்   வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்கு செல்கின்றார்கள் .

இவைத்தான் தற்போது நடக்கின்றது . இதற்கு உதாரணமாக  சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  உதயங்க  வீரதுங்க  கைது செய்ப்பட்டு சில மணித்தியாலங்கள் விசாரணைகளின் பின் வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. என தெரிவித்தார்.