'NASCAR' என்ற தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கத்தின் கார்ப்பந்தைய வீரரான அமெரிக்காவின் ரியான் நியூமன் என்பவர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புளோரிடாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற 'Daytona 500' என்ற கார்ப்பந்தையத்தில் கலந்து கொண்டபோது அவரது கார் எதிர்பாராத விதமாக கோர விபத்துக்குள்ளாகி தீப் பற்றி எரிந்தது. தொடர்ந்து மீட்பு படையினரின் உதவியுடன் காரிலிருந்து மீட்க்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் அவர் உடனடியாக புளோரிடாவின் ஹாலிஃபேக்ஸில் உள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ரியான் நியூமனின் நிலை பற்றி தெரிவித்த NASCAR அதிகாரிகள், அவரது நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந் நிலையில் ரியான் நியூமன் குணமடைவதற்கு பிரார்த்தனை மேற்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

42 வயதான ரியான் நியூமன் 2008 டேடோனா - 500 மற்றும் 2013 ப்ரிக்யார்ட் - 400 கார்ப் பந்தைய கிண்ணம் உட்பட 18 கிண்ணங்களை தனதாக்கியுள்ளதுடன் மேலும் பல கிண்ணங்களையும் தனதாக்கியுள்ளார்.