(எம்.எப்.எம்.பஸீர்)

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் நான்கினை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆரம்பம் முதல் விசாரணைகளை முன்னெடுத்த எப்.சி.ஐ.டி.யின்  பிரதான விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரன்சிஸை, விசாரணை பொறுப்புக்களில் இருந்து மாற்றியமை தொடர்பில்  கோட்டை நீதிவான் நீதிமன்றம் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

' கடந்த 2015.03.26 முதல் 2020.01.21 வரை இவ்விவகாரத்தை கையாண்ட பிரதான விசாரணை அதிகாரி நிஹால் பிரன்ஸிஸ், அவரை வழி நடத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பவித்ர தயாரத்ன ஆகியோரை அப் பொறுப்புக்களில் இருந்து  நீக்கப்பட்டமைக்கான காரணம்,  அவர்களை மீள உள்ளீர்த்து அவர்கள் ஊடாக அது குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா என்ற விடயங்கள் குறித்து  நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும்' என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இவ்வாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார். 

மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் 4 இனை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற பண மோசடிகள்  குறித்த விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது. 

இதன்போதே கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தர்வை பிறப்பித்தார்.

இன்றைய தினம் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக விளக்கமறியலில் உள்ள உதயங்க  வீரதுங்க மன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மன்றில் பிரசன்னமானார்.

 தற்போது இந்த விவகார விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. சார்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் விஜித்த பெரேரா, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர்  சந்திமா அரும பெரும, பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ ஆகியோர் மன்றில் ஆஜராகினர். அவர்களுடன் சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக ஆகியோரும் ஆஜராகினர்.

அத்துடன் இதன்போது உதயங்க வீரதுங்கவின் பிணைக் கோரிக்கையினையும் நிராகரித்த நீதிவான், வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாகவும் கூறினார்.