(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணி ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ( ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன ) ' என்ற பெயரில் ' தாமரை மொட்டு ' சின்னத்தில் நேற்று திங்கட்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுனவுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இப் புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் கமத்தொழில் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர மற்றும் அக் கட்சியின் பொருளாலரும் அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காசியவசம் ஆகியோர் இந்த புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளித்திருந்தனர். 

' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' என்று பெயரிடப்பட்டுள்ள இக் கூட்டணியின் தலைவராக பிரதமரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைவராகப் பெயரிடப்பட்டுள்ள அதே வேளை , முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தவிசாளராகவும் பெயரிடப்பட்டுள்ளனர். 

அத்தோடு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ பொதுச் செயலாளராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர உப செயலாளராகவும் பெயரிடப்பட்டுள்ளனர். 

சு.க. பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் தேசிய அமைப்பாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.