(எம்.மனோசித்ரா)

கொழும்பிலிருந்து ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்களை சென்னைக்கு கடத்தவிருந்த இலங்கை பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று காலை 7.30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லவிருந்த UL 121 விமானத்திற்கூடாகவே இவ்வாறு தங்கம் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. 

விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளால் குறித்த பயணி சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது அவரது பாதணிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

1400 கிராம் நிறையுடைய இந்த தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி ஒரு கோடியே 28 இலட்சத்து 74 ஆயிரத்து 848 ரூபா என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

தங்கம் கடத்த முயன்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.