மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியாது இலங்கையுடன் ஒரு ஒருநாள் பயிற்சிப் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு :20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந் நிலையில் இன்று கொழும்பு சரவணமுத்து கிரக்கெட் மைதானத்தில் ஆரம்பமான பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை குவித்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் டரன் பிராவோ 88 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 100 ஓட்டங்களையும், சுனில் அம்ரிஸ் 41 ஓட்டங்களையும், நிகோலஷ் பூரண் 41 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும், தக்ஷில டிசில்வா, கவிந்து நதீஷன், புலின தரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் 283 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியனது 47.3 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது. 

இலங்கை அணி சார்பில் இப்போட்டிக்கு தலைமை தாங்கிய உபுல் தரங்க சிறப்பாக துடுப்பெடுத்தாடி 124 பந்துகளில் ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கலாக 120 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 64 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெல்டன் கொர்ட்ரல், ஹெய்டன் வேல்ஸ் மற்றும் பேபியன் அலென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கீமோ பவுல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.