பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ இந்­தி­யாவைப் பயன்­ப­டுத்தி, பொரு­ளா­தார நெருக்­க­டி­களில் இருந்து தப்பிக் கொள்வதற்­கான, முயற்­சி­களில் இறங்கி யுள்ள நிலையில், அவர் நாட்டின் பெயரைக் கெடுத்து விட்டார் என்று எதிர்க்­கட்­சிகள் குற்­றச்­சாட்­டு­களை சுமத்த ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.

இந்­தி­யா­விடம் பெறப்­பட்ட கடன்­களைத் திருப்பிச் செலுத்­து­வ­தற்­கான தவணைக் காலத்தை 3 ஆண்­டு­க­ளுக்கு நீடிப்புச் செய்து தரு­மாறு இந்­தி­யா­விடம் கோரி­யி­ருப்­ப­தா­கவும், அதற்கு சாத­க­மான பதில் கிடைக்கும் என்று நம்­பு­வ­தா­கவும், பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ இந்­திய ஊடகம் ஒன்­றுக்கு அளித்த செவ்­வியில் கூறி­யி­ருந்தார்.

கடனை திருப்பிச் செலுத்­து­வ­தற்கு இய­லாமல் உள்­ளது, அதற்கு மேல­திக கால­அ­வ­காசம் தர வேண்­டு­மென்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்­தி­யா­விடம் கோர­வில்லை.

“இந்­தியா இதற்கு ஒத்துக் கொண்டால், ஜப்­பா­னிடம் பெறப்­பட்ட கடன்­களை திருப்பிச் செலுத்­து­வ­தற்­கான கால­ அ­வகா­சத்தை நீடித்துக் கொள்ள முடியும். அதனை பயன்­ப­டுத்தி சீனா­விடம் பெற்ற கடன்­களை திருப்பிச் செலுத்­து­வ­தற்கு கால­அ­வ­கா­சத்­தையும் கோர முடியும்” என்றே  அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இந்­தி­யாவை பயன்­ப­டுத்தி, சீனா, ஜப்பான் போன்ற நாடு­க­ளிடம் பெறப்­பட்ட கடன்­களை, திருப்பிச் செலுத்­து­வ­தற்கு கால­அ­வ­காசம் பெறு­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது.

இந்த ஆண்டில், 4.8 பில்­லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்­டிய நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்­கி­றது. இது தற்போதைய அர­சாங்­கத்­துக்கு மிகப் ­பெ­ரிய சிக்­க­லாக உள்­ளது.

புதிய அர­சாங்கம் கடன் நெருக்­க­டிகள் மற்றும் பொரு­ளா­தார சிக்­கல்­க­ளினால், திட்­ட­மிட்­ட­வாறு பொரு­ளா­தார திட்­டங்­களை முன்­னெ­டுக்க முடி­யாமல் இருக்கிறது.

வரும் மே மாதத்­துக்கு முன்னர், பொதுத்­தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யிலும், பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை இல்­லா­த­தாலும், பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளாலும், அரசாங்­கத்­தினால், எந்த திட்­டத்­தையும் செயற்­ப­டுத்த முடியா­துள்­ளது.

பொதுத்­தேர்­த­லுக்குப்  பின்னர், புதிய அர­சாங்கம் தனது திட்­டங்­களை நடை­ முறைப்­ப­டுத்­து­வ­தற்கு பெரி­ய­ளவில் நிதி தேவைப்­படும். இவ்­வா­றான நிலையில், 4.8 பில்­லியன் டொலரை மீளச் செலுத்தும் போது, அர­சாங்கம் பெரிய நெருக்­க­டியை சந்­திக்கும்.

கடந்த அர­சாங்­கமும் கூட, தனது இறுதிக் கால­கட்­டத்தில் கடு­மை­யான நெருக்­க­டி­களை சந்­திக்க நேரிட்­டது. கடந்த ஆண்டில் 5.6 பில்­லியன் டொலர் கடன்­தொகை திருப்பிச் செலுத்­தப்­பட்­டது. இந்த ஆண்டில் 4.8 பில்­லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் நிலை ஏற்­பட்டால், புதிய அர­சாங்­கத்தின் இய­லா­மையை மக்­க­ளுக்கு வெளிப் ­ப­டுத்தி விடும். அது அர­சாங்­கத்தின் மீது ஆரம்பக் கட்­டத்­தி­லேயே வெறுப்பை ஏற்­ப­டுத்தும்.

வரும் தேர்­தல்­களில் அர­சாங்­கத்­துக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடும் என்­ப­தாலும், தனது திட்­டங்­களை செயற்­ப­டுத்­து­வதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­கவும் தான், எப்­ப­டி­யா­வது கடன் திருப்பிச் செலுத்தும் கால­ எல்­லையை நீடிக்க முற்­ப­டு­கி­றது.

இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்­டிய கடன்­களில், இந்­தி­யா­விடம் பெறப்­பட்­டது, 120 மில்­லியன் டொலர் தான். அதற்­கான வட்­டி­க­ளையும் சேர்த்து. 169.7 மில்­லியன் டொலரை செலுத்த வேண்­டி­யுள்­ளது. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்­டிய மொத்த கடன் தொகை­யான 4.8 பில்­லியன் டொலரில், 28இல் ஒரு பங்கு தான் இது.

அடுத்த ஆண்டில், 182 மில்­லியன் டொல­ரையும், 2022 இல், 168 மில்­லியன் டொல­ரையும் இந்­தி­யா­வுக்கு திருப்பிச் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

ஜப்­பா­னுக்கு இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்­டிய கடன் தொகை­யான, 190 மில்­லியன் டொலர் கூட, ஒப்பீட்டளவில் சிறி­யது தான்.

சீனா­விடம் பெறப்­பட்ட 500 மில்­லியன் டொலர் கடனும், வங்­கிகள் மூலம் திரட்­டப் ­பட்ட 1.4 பில்­லியன் டொலர் கடனும் இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்­டிய முக்­கி­ய­மான கடன்­க­ளாகும். இதில் வங்­கிகள் மூலம் திரட்­டப்­பட்ட கடன்­களை திருப்பிச் செலுத்­து­வதை தவிர்க்க முடி­யாது. அதனை கொடுத்து தான் ஆக வேண்டும்.

சீனா­விடம் பெறப்­பட்ட கடன் மற்றும் அதற்­கான வட்­டி­யுடன் சேர்த்து, இந்த ஆண்டில் 674.4 மில்­லியன் டொலரை செலுத்த வேண்­டிய நிலையில் உள்­ளது அர­சாங்கம். எனவே, தான் சீனா, ஜப்பான், இந்­தியா போன்ற நாடு­க­ளிடம் பெறப்­பட்ட கடன்­களை திருப்பிச் செலுத்­து­வ­தற்கு மேல­திக கால­அ­வ­கா­சத்தைக் கோர முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

சீனா­வுக்கே அதி­க­ளவு கடன்­களை திருப்பிக் கொடுக்க வேண்­டி­யுள்ள நிலையில், கால­அ­வ­காசம் தரு­மாறு அந்த நாட்­டி­டமே முதலில் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் சீனப் பய­ணத்தின் போது, இதற்­கான கோரிக்கை விடுக்­கப்­படும் என்று அர­சாங்க வட்­டா­ரங்கள் கூறி­யுள்­ளன.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் சீனப் பயணம் ஜன­வரி மாதம் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும். பல்­வேறு இழு­ப­றி­க­ளாலும், கொரோனா வைரஸ் பீதி­யாலும் அந்தப் பயணம் பிற்­போ­டப்­படும் நிலை ஏற்­பட்­டது.

இந்த நிலையில் தான், இந்­தி­யா­விடம் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ கடனை திருப்பிச் செலுத்தும் கால­ அ­வ­கா­சத்தை நீடிக்­கு­மாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த கடன்­தொ­கையை மூன்று ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் திருப்பிச் செலுத்­தினால் போதும் என்று ஒப்­புக்­கொண்டால், அதனைப் பயன்­ப­டுத்தி, சீனா­வி­டமும், ஜப்­பா­னி­டமும், இந்­தி­யாவை முன்­மா­தி­ரி­யாக காட்டி தப்­பித்துக் கொள்­ளலாம் என்று அர­சாங்கம் நினைக்­கி­றது. சீனாவைப் பொறுத்­த­ வ­ரையில், வணிக கடன்கள் விவ­கா­ரத்தில் ஏற்­க­னவே செய்து கொண்ட உடன்­பா­டு­களை மீளாய்வு செய்­வ­தற்கு அவ்­வ­ள­வாக விரும்­பு­வ­தில்லை. ஏற்­க­னவே செய்து கொண்ட இணக்­கப்­பா­டு­களின் படி செயற்­பட வேண்டும் என்று எதிர்­பார்க்கும் நாடு அது.

ரணில்- – மைத்­திரி கூட்டு அர­சாங்­கத்தின் காலத்தில், சீனாவே இலங்­கையை கடன் பொறிக்குள் தள்­ளி­யது என்ற குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. அத்­துடன், இலங்­கைக்கு வழங்­கிய கடன்­க­ளுக்­கான வட்­டியை குறைக்க வேண்டும் என்று பீஜிங் வரை சென்று போராடி பார்த்தார் அப்­போ­தைய நிதி­ய­மைச்சர் ரவி கருணாநாயக்க.

ஆனால், சீனா இது இரு­த­ரப்பு வணிக உடன்­பாடு என்றும், இரண்டு நாடு­க­ளுக்கும் நன்­மை­ய­ளிக்கும் வகையில், ஒப்புக் கொள்­ளப்­பட்ட உடன்­பாட்­டி­லி­ருந்து விலக முடி­யாது எனவும் சீனா திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருந்­தது.

சீனாவின் இந்த நிலைப்­பாட்­டினால், அப்­போ­தைய அர­சாங்­கத்­துக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான உற­வு­க­ளிலும் விரி­சல்கள் ஏற்­பட்­டன.

அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­பாட்டை மீளாய்வு செய்­யப்­போ­வ­தாக தற்­போ­தைய அர­சாங்கம் அறி­வித்த போதும், சீனா அதனை விரும்­ப­வில்லை. அதற்குப் பின்­னரே, அந்த முடி­வி­லி­ருந்து பின்­வாங்­கி­யது.

  எனவே தான், கடன் திருப்பிச் செலுத்தும் கால­எல்­லையை நீடிக்­கு­மாறு முதலில் சீனா­விடம் வாய் வைக்­க­வில்லை.

இந்­தியா அந்தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்டால், அதனை கார­ண­மாக வைத்து, சீனா, ஜப்­பா­னி­டமும் அதே வேண்­டு­கோளை முன்­வைக்க திட்­ட­மிட்­டுள்­ளது அர­சாங்கம். இது இந்­தி­யாவை துருப்­புச்­சீட்­டாகப் பயன்­ப­டுத்தித் தப்பிக் கொள்ளும் யுக்தியாகவே கூறலாம்.

இந்­தி­யா­வுக்கு இது ஒன்றும் பெரிய சிக்­க­லான விட­ய­மல்ல. ஏனென்றால், இந்­தியா கொடுத்­துள்ள கடன் மிகப் பெரி­ய­தல்ல. ஆனால் சீனா கொடுத்­துள்ள கடன், இந்­தியா கொடுத்த கடன்­களை விட நான்கு மடங்கு அதிகம்.

எனவே இந்­தி­யாவின் முன்­னு­தா­ர­ணத்தை சீனா பின்­பற்­றுமா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­யது தான்.

எவ்­வா­றா­யினும், பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவி­னதும் அவ­ரது அர­சாங்­கத்­தி­னதும் இந்தக் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி போன்றன கடுமையாக விமர்சித்திருக்கின்றன.

உள்நாட்டு விவகாரங்களை பிற நாடுகளிடம் கொண்டு செல்வதை நாட்டு மக்கள் விரும்பவில்லை என்றும், இவ்வாறான நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்தியா, சீனா போன்ற நாடுகளை நாடியிருப்பது பொருத்தமானது அல்ல என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

ஆனாலும், நாட்டு மக்களின் நலனுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கை தான் இது என்று சமாளிக்க முனைந்திருக்கிறது அரசாங்கம்.

ஆட்சியைப் பிடித்திருந்தாலும், தற்போதைய அரசாங்கம் அதனை கொண்டு நடத்துவதற்காக, பிற நாடுகளின் தயவுக்காக, குறிப்பாக இந்தியாவின் தயவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை.    

- ஹரிகரன்