‘’தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் மாற்று அணி எப்போது உருவாகும் என்ற வடக்கு, கிழக்கில் உள்ள எல்லா மக்களினதும் புத்திஜீவிகளினதும் பொது அமைப்புகளினதும் ஊடகங்களினதும் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றிய போது குறிப்பிட்டிருந்தார்.
தேர்தலை வெற்றி கொள்ளும் நோக்கத்துடன் கூட்டணியை தாம் உருவாக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியிருக்கும் மாற்று அணி என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியே தவிர, கூட்டமைப்பு தற்போது வகிக்கும் தலைமைத்துவத்துக்கு மாற்றானது அல்ல.
மாற்று தலைமைத்துவம் என்பதை வெறுமனே மாற்று அணிகளின் உருவாக்கங்கள் தீர்மானிக்க முடியாது.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணி என்று தேர்தல்களில் போட்டியிட்ட பல அணிகள், வெற்றியைப் பெறவில்லை. அவ்வப்போது தேர்தல்களில் தோல்வியை சந்தித்த பின்னர் காணாமலும் போயிருக்கின்றன. மாற்றுத் தலைமையா இது என்பதை மாற்று அணிகளின் உருவாக்கத்தின் மூலம், கணிக்க முடியாது. அதனை மக்கள் தான் தீர்மானிக்க முடியும். தேர்தல்களில் மக்கள் வெளிப்படுத்தப் போகின்ற ஆதரவு தான் அதனை முடிவு செய்யும்.
தம்மை மாற்று அணி என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கின்ற போதும், அவர் தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு தாங்கள் இந்தக் கூட்டணியை உருவாக்கவில்லை என்று கூறியிருப்பது கவனிக்க வேண்டியது.
பதவிகளும் சலுகைகளும் தமக்கு முக்கியமில்லை என்று அவர் குறிப்பிட்டதிலிருந்தே, அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அரசியல் கட்சிகள், கூட்டணிகளைப் பொறுத்தவரையில் தேர்தல் என்பது முக்கியமானது. தேர்தலை எதிர்கொள்வதும் அதில் வெற்றி பெறுவதற்கு வெறித்தனமாக உழைக்க வேண்டியதும் அவசியமானது.
அரசியல் கட்சிகள் என்பது தேர்தலின் மூலம் மக்களுக்கு தலைமை தாங்குவதற்காக உருவாக்கப்படுபவையே. தேர்தல் வெற்றி முக்கியமல்ல, மக்களின் நலனுக்காக செயற்படுவதே இலக்கு என்றால், மக்களின் கொள்கைகளையே முன்னெடுத்துச் செல்வது என்றால், அதற்கு அரசியல் கட்சிகள் தேவையும் இல்லை.
ஜனநாயக அரசியலில், கட்சிகள் தேர்தல்களில் வெற்றியீட்டுவது முக்கியமானது. அதன் மூலம் தான் மக்களுக்குத் தலைமை தாங்க முடியும். மக்களின் பிரதிநிதிகளாக செயற்படவும் முடியும்.
இவ்வாறான நிலையில், தேர்தல் வெற்றி முக்கியமல்ல என்ற விக்னேஸ்வரனின் கருத்து மாற்று அணியின் பலம் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையீனத்தை தான் வெளிப்படுத்தியிருக்கிறது.
தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை, முன்னரைப் போன்று வெற்றி பெறமுடியாது என விக்னேஸ்வரன் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.
ஒருபோதும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக தோல்வி காணும் என்றோ அதனை தாங்கள் தோற்கடிப்போம் என்றோ கூறவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த இரண்டு தசாப்தங்களாக, தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்கிறது. அதனைத் தோற்கடிப்பது இலகுவானதல்ல என்பது அவரது கணிப்பாக இருக்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் முக்கியமானதாக உள்ள தமிழரசுக் கட்சி வலுவான கட்சி கட்டமைப்புகளை வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் கொண்டிருக்கிறது. இதுவும், கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு சிரமமான காரியம் என்பது அவருக்கு தெரிந்திருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணி என்று பிரகடனம் செய்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அதனைத் தோற்கடிப்போம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை கொடுக்க வேண்டியது தான் முக்கியமானது.
அவ்வாறான நம்பிக்கையை கொடுக்க முனையாத ஒரு மாற்று அணியினால், எவ்வாறு மக்களிடம் மாற்றுத் தலைமையாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கையை உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
அதைவிட, இந்த மாற்று அணி நேரடியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுத்திருக்கிறது. அதன் குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருக்கிறது. கூட்டமைப்பின் தவறுகளை திருத்த முடியாததால் தான், அதிலிருந்து விலகியதாகவும் ஒற்றுமை என்ற பெயரில் மீள இணைய விடுத்த அழைப்பை நிராகரித்ததாகவும் கூறுகிறது.
அவ்வாறான மாற்று அணி, தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டது அல்ல என்று கூறுவது வியப்பு.
தலைமைத்துவம் தவறானது என்பதை சுட்டிக்காட்டுவதோ குற்றம்சாட்டுவதோ மாத்திரம் மாற்று அணியின் பொறுப்பு அல்ல. அந்த தவறைத் திருத்தவோ அல்லது அதற்கு மாற்றான தலைமைத்துவத்தை அளிக்கவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது தான் பொறுப்பு வாய்ந்த செயல்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குற்றம்சாட்டி அரசியல் செய்வது யாழ்ப்பாணத்திலிருந்து புதுடெல்லி வரைக்கும் போய் விட்டது.
டக்ளஸ் தேவானந்தாவும் சி.வி.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஆனந்த சங்கரியும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, அனந்தி சசிதரன் போன்றவர்களும் கூட்டமைப்பை குறை கூறி அரசியல் செய்வது வழக்கம். ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் அதனைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற சிங்களத் தலைவர்களும் கூட்டமைப்பை குறை சொல்லித் தான் அரசியல் நடத்துகிறார்கள்.
அண்மையில் பிரதமர் மஹிந்த புதுடெல்லியில் கூட அதனைச் செய்திருக்கிறார்.
எல்லாத் தரப்புகளும் கூட்டமைப்பை விமர்சிக்கின்றன, குறை சொல்கின்றன. அப்படியிருக்கையில், கூட்டமைப்பை தோற்கடிக்கும் அரசியலை அதற்கேயுரிய வீச்சுடன் முன்னெடுக்க வேண்டியது தான் மாற்று அணியின் இலக்காக இருக்க வேண்டும்.
வரும் பொதுத்தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒன்று தான் மாற்று அணி என்ற அடையாளத்துடன் போட்டி போடும் என்றில்லை. இன்னும் பல அணிகள், மாற்று அணிகள் களமிறங்கவும் களமிறக்கப்படுவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான அணிகள், கூட்டணிகள் எல்லாமே போட்டி போடும்போது தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிப் போகும். அது வடக்கில் காலூன்றவும் வடக்கிலுள்ள மக்களின் வாக்குகளை சிதறடிக்கவும் காத்திருக்கும் சக்திகளுக்கு சாதகமானதாக அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்ற அரசியல் நியதி கிடையாது. அதனை மாற்ற வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு உருவானால், அவர்கள் அதனை செய்தே ஆவார்கள்.
அவ்வாறான மாற்றம் என்பது, வலுவான ஒன்றாக இருக்க வேண்டும். கூட்டமைப்பும் மாற்று அணிகளும் மோதிக் கொண்டிருக்க, பின்னால் நிற்கும் வேறு தரப்புகள் ஆசனங்களைப் பங்கிட்டுக் கொண்டு போய் விடுவதற்கு வழிவகுத்து விடக்கூடாது.
அந்த விடயத்தில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள எல்லா கட்சிகளுமே தவறிழைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து தம்மைப் பலப்படுத்திக் கொள்ள இந்த அணிகள் முயற்சிக்கின்றனவே தவிர, தமிழ் மக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து, தமிழரின் அரசியல் பலத்தை அதிகரித்துக் கொள்ள முனையவில்லை.
இந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால், மாற்று அணிகளின் உருவாக்கம், தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மாற்று அணிகள் என்று புறப்படும் தரப்புகள், தமிழரின் அரசியல் பலம் சிதைந்து விடாதபடி தமது வியூகங்களை வகுத்து, தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவம் தவறான தரப்புகளின் கைகளுக்கு சென்று விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானது.
- கபில்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM