உலக மயமாக்கம், தொழில்நுட்ப மயம் என்பன இயற்கை வளத்தை அழித்து வந்த காலம் கடந்து, தற்போது இயற்கையின் முக்கியத்துவம் உணரப்பட்டு வரும் இக்காலக்கட்டத்திலும் இயற்கையை காப்பதில் போராடவேண்டிய நிலைக்கு எம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் அண்மைய போக்குகளை நோக்கும் போது அமேசன் காட்டில் பற்றிய காட்டுத்தீ, அவுஸ்திரேலியாவில் பரவிய காட்டுத்தீ என்பன மனித இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்ச நிலையை மேலோங்க செய்தது. காட்டுத்தீ காரணமாக அவுஸ்திரேலியாவில் மாத்திரம் பல்லாயிரக்கணக்கான விலங்குகள் தீயில் கருகி மாண்டுப்போயின. இதனால் மக்கள் இயற்கை வனாந்தரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை பாதுகாக்க முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கையை பொறுத்தவரை இயற்கை வளங்கள் நிறைந்த நாடு என்று முன்னர் ஒருகாலத்தில் பெயர் பெற்றிருந்த போதிலும் இயற்கை வனங்கள் விரைவாக அழிவடையும் நாடுகளின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதே.

கைத்தொழில் மயமாக்கல், மக்கள் குடியேற்றம் என தேவைகள் பெறுக பெறுக இயற்கை வனங்களின் அடர்த்தியும் குறைந்து கொண்டே செல்கின்றது. 1882 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 82 சதவீதமாக காணப்பட்ட இயற்கை வனாந்தரங்களின் அடர்த்தி 2016ஆம் ஆண்டாகும்போது 16 சதவீதமாக குறைவடைந்துள்ளமை நாட்டின் இயற்கை வனாந்தரங்களின் அழிவு வேகத்தை எமக்கு பறைசாற்றுகின்றது.

இதை காப்பதற்கு சுற்றுச்சூழல் ஆர்வளர்கள், அரச அதிகாரிகள்  என சமூக அக்கறை கொண்டவர்கள் முனைப்புடன் செயற்பட்ட போதிலும் இயற்கை தொடர்பில் எவ்வித கரிசனையும் இல்லாதவர்களிடம் இருந்து இயற்கை வனங்களை பாதுகாக்க போராட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இயற்கை வனங்கள் எமது நாட்டில் அரசியல் ரீதியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அண்மைக்காலத்தில் வில்பத்து சரணாலய விவகாரம் எமக்கு எடுத்துக் காட்டியது.

இந்த விவகாரம் பூதாகரமாவதற்கு முக்கிய காரணம் அதில் அரசியல்வாதிகளின் தலையீடு இருந்தமையாகும்.

கம்பஹா மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற ஒரு விடயமும் ஒரு அரசியல்வாதியின் தலையீடு இருந்தமையினால் இன்று அது குறித்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முக்கிய இடம்பிடித்துள்ளதைக் காணலாம்.

கம்பஹா மாவடத்தில், நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள சதுர்ப்பு நிலப் பிரதேசத்தில் சதுர்ப்பு நிலத் தாவரங்களை அழித்து விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பது குறித்த விடயத்தில் சதுர்ப்பு தாவரங்களை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராஜாங்க அமைச்சருடன் துணிச்சலாக பேசிய மாவட்ட வனத் துறை அதிகாரி இன்று வீரப் பெண்ணாக அனைவராலும் போற்றப்படுகின்றார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள சதுர்ப்பு நிலத்தை நிரப்பி விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க வேண்டும் என அங்கிருந்த சிலரால் அமைச்சருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும் குறித்த பிரதேசம் வன வளத்துறை பாதுகாப்பு திணைக்களத்துக்கு உரிய இடம் என்பதால் குறித்த பிரதேசத்தை விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கி தருமாறு இராஜாங்க அமைச்சரினால் அங்கு சமுகமளித்திருந்த வன வளத்துறை பாதுகாப்பு திணைக்களத்தின் மாவட்ட அதிகாரியான தேவானி ஜயதிலக்கவிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அந்த பெண் அதிகாரி  அப்பிரதேசம் சதுர்ப்பு தாவரங்கள் நிறைந்துள்ள பிரதேசம். ஆகவே அங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டால் அத்தாவரங்கள் அழிவடைந்து விடும் என சுட்டிக்காட்டியதுடன் இயற்கை தாவரங்களின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டி தற்போது கம்பஹா மாவட்டத்தின் வனாந்தர செறிவுத்தன்மை குறித்தும் விளக்கினார். சிலரின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு காரணமாக வனவளத்துறை திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளின் இயற்கை வனாந்தரம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியதுடன் இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் மக்கள் சுவாசிப்பதற்கு ஒட்சிசன் இல்லாமல் போகும் என தெளிவுபடுத்திக் கொண்டிருந்த வேளை அங்கிருந்த ஒருவர், விளையாட்டு மைதானம் தான் முக்கியம் ஒட்சிசன் இருந்து பயனில்லை என அந்தப் பெண்ணிடம் வாதிட்டார். இருப்பினும் அவ்வாறான முட்டாள்தனமான வாதங்களையும் கடந்து அந்தப் பெண் இயற்கை வனாந்தரத்தை பாதுகாப்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

இவற்றை செவிமடுத்த இராஜாங்க அமைச்சர் “இலங்கை ஒரு சிறிய தீவு இதில் சிறிய நிலப்பரப்பே உள்ளது. வன பாதுகாப்பு, கரையோர பாதுகாப்பு என  ஒதுக்கி செயற்பட்டால் மக்கள் எங்கே வசிப்பது.  இந்த பிரச்சினையை நடுநிலையில் இருந்து நாம் தீர்க்க வேண்டும். ஆகவே விளையாட்டு மைதானத்துக்கு மாத்திரம் அந்தப் பிரதேசத்தை விடுவித்து தரவும்” என கோரிக்கை விடுத்தார். இருப்பினும் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்றும் தளராத அந்தப் பெண் “எதுவானாலும் சட்டத்தின் பிரகாரமே செய்ய முடியும் சட்டத்துக்கு முரணாக தன்னால் எதையும் செய்ய முடியாது” என உறுதியான ஒரு பதிலை அமைச்சருக்கு வழங்கினார்.

இதையடுத்து இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்த கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு குறித்த பெண் அதிகாரியை விமர்சிக்கும் வகையிலும் அவரை குற்றவாளி எனும் வகையிலும் பதிலளித்திருந்ததுடன் அந்த அதிகாரியின் அனுமதி இல்லாவிட்டாலும் குறித்த விளையாட்டு மைதானத்தை அமைத்தே தீருவோம் எனவும் சபதம் விட்டிருந்தார்.

இயற்கை வனம் அழிந்தாலும் நான் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பதுதான் அமைச்சரின் நிலைப்பாடு என்பதை நாட்டு மக்களுக்கு அவரின் பதில் உணர்த்தியிருந்தது.

பலருக்கு மத்தியில் தனித்து நின்று இயற்கையை காப்பதற்காக போராடிய வனத்துறை பெண் அதிகாரி ஒருவருக்கு இருந்த அக்கறை மக்களின் பிரதிநிதியாக, மக்களினதும் அரசாங்கத்தினதும் நம்பிக்கைக்குரிய அமைச்சர் ஒருவருக்கு இல்லையே என்பதுதான் கவலை. இவர் யாரை திருப்திப்படுத்த இவ்வாறு செயற்படுகின்றார் என்பது யார் அறிவாரோ என மக்கள் பேசிக்கொண்டனர்.

அதே போன்று ஒட்சிசனின் முக்கியத்துவம் என்னவென்று தெரியாமல் ஒட்சிசன் இருந்து பயனில்லை என்று தெரிவிக்கும் அளவுக்கு சிலர் எம்மத்தியில் இருப்பது மானிட சமூகத்துக்கு தலைக்குனிவேயாகும்.

இலங்கையில் 19 இலட்சத்து 51 ஆயிரத்து 473 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இயற்கை வனாந்தரம் காணப்படுவதாகவும் இது மொத்த நிலப்பரப்பில் 29.7 சதவீதமாகுமெனவும் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரத்து 670 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சதுர்ப்பு நிலத் தாவரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கருத்தின் படி இலங்கையில் மொத்த நிலப்பரப்பில் 2016 ஆம் ஆண்டளவில் 16 சதவீதமே இயற்கை வனாந்தரம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது 1882 ஆம் ஆண்டு மொத்த நிலப்பரப்பில் 82 சதவீதமாக காணப்பட்டதாக  சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையை பொறுத்தவரையில் 2 கோடிக்கும் அதிகமாக மக்கள் வாழ்கின்றனர். இந்த சனத்தொகையை நாட்டின் மொத்த நிலப்பரப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவர்கள் வெளியிடும் காபனீரொட்சைட்டின் அளவின் படி இயற்கை வனாந்தரங்களின் அளவு 24 சதவீதமாகவேனும் இருக்க வேண்டும். ஆகவே வனாந்தரத்தின் அளவை பெருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

வனாந்தர அழிப்பில், உலகில் 4ஆவது இடத்தில் இலங்கை காணப்படுகின்றது.  2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இது வரையான காலப்பகுதியில் இலட்சக்கணக்கான ஹெக்டேயர் வனப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வனாந்தரங்களின்  பரப்பளவு 10 – 12 சதவீதம் வரை குறைவடையுமென எச்சரிக்கப்படுகின்றது.  

இவ்வாறான அபாயகரமான நிலையில் இயற்கை வனங்களை பொக்கிஷமாக காக்க வேண்டிய கட்டத்தில் அதை அளிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் துணை போவது நியாயமா? இயற்கை வனாந்தரத்தை பெருக்குவது நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பல்லவா? என சமூகவலைத்தளங்களில் மக்கள் குரலெழுப்பி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

எஸ்.வினோத்