பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குமார் சங்கக்கார, அங்குள்ள பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் பாகிஸ்தானின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டார். 

இந்த நிகழ்வில் எம்.சி.சி குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குமார் சங்கக்கார தலைமையிலான எம்.சி.சி. அணியானது லாகூர் அணியுடன் 4 இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டியில் எம்.சி.சி. அணி வெற்றிபெற்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் தோல்வி கண்டது. இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றும், நான்காவது போட்டி நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

இந் நிலையிலேயே குமார் சங்கக்கார எம்.சி.சி. குழுவினருடன் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசார நிகழ்வில் பாகிஸ்தான் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டிருந்தார்.

அது மாத்திரமல்லாது சங்கக்கார லாகூரில் உள்ள ஜிம்கானா கோல்ப் கிளப்புக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், பயிற்சியிலும் ஈடுபட்டார். 

பாகிஸ்தான் விஜயம் குறித்து தெரிவித்த சங்கக்கார, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடுவதும், ஹேட்டல்களில் தங்கியிருப்பதும் போதாது, ஒரு சுற்றுலாப் பயணிகாக வந்து நாட்டின் பல இடங்களுக்கு செல்வது சுவாரஷ்யமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அது மாத்திரமல்லாது சங்கக்கார தனது ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

photo credit : twitter