வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 50 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 50 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது மண்டப வாயிலுக்கு வந்த சில இளைஞர்கள் ரெலோவின் கொடியை இறக்க முற்பட்டதாகவும் இதனையடுத்து ரெலோ உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது அங்கு வந்த இளைஞர்கள் ரெலோவின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகன் அவர்களுடைய படத்தை ஏன் முன்னுக்கு காட்சிப்படுத்தவில்லை எனவும், யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தில் இரு இளைஞர்களை புளொட் அமைப்பினர் சுட்டுக் கொன்றிருந்தனர். 

தற்போது புளொட் தலைவர் சித்தார்த்தனை கூப்பிட்டு விழா செய்கிறீர்களா என தர்க்கம் விளைவித்தனர். அங்கு ரெலோ உறுப்பினர்களும் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டது.

அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிசாரின் துணையுடன் நிலமையை கட்டுப்படுத்தியதுடன், தாக்கப்பட்டதாக கூறி ரெலோ உறுப்பினர் ஓருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ரெலோவால் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.