காணாமல் போயுள்­ள­வர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று வெறு­மனே கூற முடி­யாது. அவர்கள் எவ்­வாறு கொல்­லப்­பட்­டார்கள், யாரால் கொல்­லப்­பட்­டார்கள், எப்­போது கொல்­லப்­பட்­டார்கள், எவ்­வாறு கொல்­லப்­பட்­டார்கள், ஏன் கொல்­லப்­பட்­டார்கள், கொல்­லப்­பட்­டார்கள் என்றால் கொல்­லப்­பட்­ட­வர்­களின் சட­லங்கள் எங்கே, அந்த சட­லங்­க­ளுக்கு என்ன நடந்­தது, சட­லங்கள் புதைக்­கப்­பட்­ட­னவா, அவைகள் எரிக்­கப்­பட்­ட­னவா, அப்­ப­டி­யானால் அவற்றைச் செய்­தது யார், அவைகள் எங்கே புதைக்­கப்­பட்­டன அல்­லது எரிக்­கப்­பட்­டன, ஏன் அவ்­வாறு செய்­யப்­பட்­டது என்­பது போன்ற எண்­ணற்ற கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்பும் உள்­ளது.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் அர­சியல் சார்ந்த உணர்ச்­சி­க­ர­மான ஒரு நிலை­மைக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றது. ஒரு தசாப்த கால­மாக இது விட­யத்தில் மௌனம் சாதித்த அரசு இப்­போது அவர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள், விடு­த­லைப்­பு­லி­க­ளினால் பிடித்துச் செல்­லப்­பட்­டார்கள் என அதி­கா­ர­பூர்­வ­மாகத் தெரி­வித்­துள்­ள­தை­ய­டுத்து இந்த நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

அத்­துடன் காணாமல் போன­வர்­களை நிலத்தில் தோண்­டித்தான் பார்க்க வேண்டும் என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பொது­ஜன பெர­மு­னவின் ஆத­ர­வுத்­தள முக்­கி­யஸ்­த­ரு­மா­கிய விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ள கருத்தும், காணாமல் போனோர் விவ­கா­ரத்தில் எரி­கின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்­கின்­றது.

காணாமல் போன­வர்கள் சாதா­ரண சூழலில் காணாமல் போக­வில்லை. அவர்கள் அதி­கா­ர­முள்­ள­வர்­க­ளினால் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்ற நீண்­ட­கால வெளிப்­ப­டை­யான குற்­றச்­சாட்டும் உள்­ளது. இதன் அடிப்­ப­டையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என்று உள்­நாட்டில் மட்­டு­மல்­லாமல் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அள­வி­லான சர்­வ­தேச மட்­டத்­திலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.  

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் ஆட்கள் காணாமல் போன சம்­ப­வங்கள் தாரா­ள­மாக இடம்­பெற்­றி­ருந்­தன. குறிப்­பாக தமிழ் இளை­ஞர்கள் வடக்கு–கிழக்குப் பிர­தே­சங்­களில் மட்­டு­மல்­லாமல் நாட்டின் தலை­ந­கரம் உள்­ளிட்ட பல இடங்­களில் வெள்­ளை­வேன்­களில் கடத்திச் செல்­லப்­பட்ட பல சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்­களும் வெளி­யா­கி­யி­ருந்­தன. முறைப்­பா­டு­களும் பதி­வாகி உள்­ளன.

யுத்த மோதல்­க­ளின்­போது அரச படை­க­ளுக்கு எதி­ராக ஆயு­த­மேந்­தி­யி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் நட­மாட்­டங்கள், அவர்­க­ளு­டைய ஆயு­தந்­தாங்­கிய செயற்­பா­டுகள் என்­ப­வற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காகக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

அந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம், அவ­ச­ர­காலச் சட்டம் என்­பன ஆயு­தப்­ப­டை­க­ளுக்குப் பேரு­த­வி­யாக அமைந்­தி­ருந்­தன. இந்தச் சட்­டங்­களைப் பயன்­ப­டுத்தி இரா­ணு­வத்­தி­னரும் பொலிஸாரும் தங்­க­ளுக்குச் சந்­தே­க­மா­ன­வர்­களைக் கைது செய்­வ­தற்கும் தடுத்து வைத்து விசா­ரணை செய்­வ­தற்கும் உரிய அதி­கா­ரங்­களைத் தாரா­ள­மாகப் பிர­யோ­கித்­தி­ருந்­தனர்.

மறைத்துத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பலர் வெளியில் வந்­தனர்
விடு­தலைப் புலி­களின் ஆயுதப் போராட்டச் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்தி அவர்­களைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்றும் பொது­மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி, சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்­கா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­துடன் அவ­ச­ர­காலச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது என்றும் அர­சாங்கம் கூறி­யி­ருந்­தது.

ஆனால் சந்­தே­கத்­திற்கு உரி­ய­வர்கள் என்­பதற்­காகக் கைது செய்­யப்­பட்­ட­வர்­களும், அடை­யாளம் தெரி­யாத வகையில் கடத்­தப்­பட்­ட­வர்­களும் பெரு­ம­ளவில் சாதா­ரண சிவி­லி­யன்­க­ளா­கவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்­பற்­ற­வர்­க­ளா­க­வுமே இருந்­தார்கள் என்­பது பல்­வேறு விசா­ர­ணை­களின் மூலம் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

சுற்­றி­வ­ளைப்புத் தேடுதல் நட­வ­டிக்­கை­களில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிலும் தேடிச் சென்று பிடிக்­கப்­பட்­ட­வர்­க­ளிலும் பலர் குடும்ப உற­வி­னர்­க­ளுக்குத் தெரி­யாமல் மறைத்துத் தடுத்து வைக்­கப்­பட்டு பின்னர் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டதன் பின்­னரே, அவர்கள் படை­யி­னரால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த விடயம் வெளிச்­சத்­திற்கு வந்­தி­ருந்­தது.

இரா­ணுவ பொலிஸ் விசா­ர­ணை­க­ளின்­போதும், நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கு­களில் விசா­ர­ணை­க­ளின்­போது பலர் குற்­ற­மற்­ற­வர்கள் என்று நிரூ­ப­ண­மா­கிய நிலை­யிலும் பலர் விடு­தலை செய்­யப்­பட்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

இத்­த­கைய பின்­பு­லத்தில் தெரிந்தும் தெரி­ய­மாலும் பிடித்துச் செல்­லப்­பட்­ட­வர்­களும் அதி­கா­ர­பூர்­வ­மாகக் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளு­மாக பெரும் எண்­ணிக்­கை­யானோர் காணாமல் போயுள்­ளார்கள் - வலிந்து காணாமல் போகச் செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதைத் தெரிந்து கொள்­கின்ற உரிமை அவர்­களின் குடும்ப உற­வி­னர்­க­ளுக்கு உண்டு. அந்த உரி­மையை எவரும் மறுக்க முடி­யாது.

அதே­வேளை, நாட்டை அதி உச்ச பாது­காப்பில் வைத்­தி­ருப்­ப­தற்­காக, இரா­ணு­வத்­தி­னரும் பொலிஸார் உட்­பட ஏனைய படைத்­த­ரப்­பி­னரும் வடக்கு கிழக்குப் பிர­தேசம் உள்­ளிட்ட நாட்டின் பல இடங்­க­ளிலும் நீக்­க­மற நிறைந்­தி­ருந்த நிலை­யி­லேயே தமிழ் இளைஞர், யுவ­திகள் காணாமல் போயுள்­ளனர் என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. அதனை சாதா­ர­ண­மாகக் கடந்து செல்­லவும் முடி­யாது.

அது மட்­டு­மல்­லாமல், 2009 மே 18 ஆம் திகதி யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த அர­சாங்கம், உயிர் தப்­பி­யி­ருந்த விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் அனை­வரும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைய வேண்டும் என்று கோரி­யி­ருந்­தது.

சர­ண­டை­ப­வர்­க­ளுக்குப் பாது­காப்­ப­ளிக்­கப்­படும். விசா­ர­ணை­களின் பின்னர் அவர்­க­ளுக்குப் பொது மன்­னிப்பு வழங்­கப்­படும் என உத்­த­ர­வா­த­ம­ளித்து, விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களை சர­ண­டை­யு­மாறு அர­சாங்­கத்தின் உத்­த­ர­வுக்­க­மைய இரா­ணு­வத்­தினர் ஒலி­பெ­ருக்­கிகள் மூல­மாக அறி­வித்­தி­ருந்­தனர்.

போர்க்­கை­திகள்
இந்த அறி­வித்­த­லை­ய­டுத்து, அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வைத்து விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் பலரும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். இவ்­வாறு சர­ண­டைந்­ததை அவர்­களின் உற­வி­னர்­களும் மற்­ற­வர்­க­ளு­மாக பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் தமது கண்­களால் நேர­டி­யாகக் கண்­டி­ருந்­தார்கள். ஏனெனில் விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்தில் இருந்த சுமார் 3 லட்சம் மக்கள் யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் இருந்து வட்­டு­வாகல் பாலத்தின் ஊடாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம் போய்ச் சேர்ந்­தார்கள்.

அவ்­வாறு வந்­த­வர்­களை இரா­ணுவம் பொறுப்­பேற்ற இடத்­தி­லேயே விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்தின் அறி­வித்­த­லுக்­க­மை­வாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். அவ்­வாறு சர­ண­டைந்­த­தையும், அவர்­களைப் பொறுப்­பேற்ற இரா­ணு­வத்­தினர் பேருந்­து­களில் அவர்­களை ஏற்றிச் சென்­ற­தையும் பலரும் நேர­டி­யாகக் கண்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பலர் காணாமல் போயுள்­ளார்கள் - வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஏனெனில் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது, எங்கே எந்த அதி­கா­ரி­களின் பொறுப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள் என்­பது பற்­றிய தக­வல்கள் வெளி­யா­கவே இல்லை.

இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த பெரும் எண்­ணிக்­கை­யான விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களில் இரு­ப­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் தொடர்பில் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் ஆட்­கொ­ணர்வு மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன. இந்த விசா­ர­ணை­க­ளின்­போது இரா­ணு­வத்­த­ரப்­புக்­காக முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணி­களும் இரா­ணுவ அதி­கா­ரி­களும் விடு­த­லைப்­பு­லிகள் எவரும் இரா­ணு­வத்­திடம் சர­ண­டை­ய­வில்லை என மறுத்­து­ரைத்­தி­ருந்­தனர்.

இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­ததன் பின்னர் காணாமல் போயுள்­ள­வர்கள் தொடர்பில் ஆட்­கொ­ணர்வு மனுக்கள் தாக்கல் செய்­துள்ள உற­வி­னர்கள் சார்பில் நீதி­மன்­றத்தில் முன்­னி­லை­யாகி வரு­கின்ற மனித உரிமை சட்­டத்­த­ர­ணிகள் இந்த மறுப்­பு­ரையை ஏற்­க­வில்லை. அது தொடர்­பாகத் தமது ஆட்­சே­ப­னை­யையும் நியாயம் சார்ந்த வாதங்­க­ளையும் நீதி­மன்­றத்தில் முன்­வைத்­துள்­ளனர்.

இந்த நீதி­மன்ற விசா­ர­ணை­களும், ஆட்­கொ­ணர்வு மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்ட விட­யமும் ஒரு­பு­ற­மி­ருக்க, அர­சாங்­கத்தின் கோரிக்­கையை ஏற்று இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­வர்­களைக் காண­வில்லை என்று சாதா­ர­ண­மாகக் கூறி­விட முடி­யாது.

இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக ஆயு­த­மேந்திப் போரா­டிய பின்னர் அர­சாங்­கத்தின் அழைப்­பி­லேயே அவர்கள் சர­ண­டைந்­தார்கள். அவ்­வாறு சர­ண­டைந்த விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் அனை­வரும் போர்க்­கை­தி­க­ளா­கவே இரா­ணு­வத்­தி­னரால் பொறுப்­பேற்­கப்­பட்­டார்கள். போர்க்­கை­தி­களை இறை­மை­யுள்ள ஓர் அர­சாங்கம் எவ்­வாறு நடத்த வேண்டும் என்­ப­தற்கு சர்­வ­தேச நிய­மங்கள் இருக்­கின்­றன.

பொறுப்­பேற்பும் முரண் நிலையும்
அந்த சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் அவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். போர்க்­கை­திகள் என்ற ரீதியில் மனி­தா­பி­மான முறை­யிலும் போர்க்­கை­தி­க­ளுக்கே உரிய உரி­மை­க­ளுடன் அவர்­களை அர­சாங்கம் நடத்­தி­யி­ருக்க வேண்டும். குறிப்­பாக விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான போர் முடி­வுக்கு வந்­துள்­ள­தை­ய­டுத்து, நியா­ய­மான வகையில் மனி­தா­பி­மான ரீதியில் அவர்­க­ளுக்குப் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­தி­ருக்க வேண்டும்.

இத்­த­கைய கடப்­பா­டு­டைய நிலை­யில்தான் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள் என்றும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் வலிந்து சேர்க்­கப்­பட்­டி­ருந்த சிறு­வர்கள் என்றும் குறிப்­பிட்டு 11 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்­களை அர­சாங்கம் புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் விடு­தலை செய்­துள்­ளது. இதனைத் தனது நல்­லெண்ண வெளிப்­பா­டா­கவும், மனி­தா­பி­மானச் செயற்­பா­டா­கவும் அர­சாங்கம் பிர­சாரம் செய்யத் தவ­ற­வில்லை.

ஆனால், அதே­நே­ரத்தில் கடத்­தப்­பட்­ட­வர்கள், பிடித்துச் செல்­லப்­பட்­ட­வர்கள், இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் என்ற மூன்று வகையில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்கள் காணாமல் போயுள்­ளார்கள் அதா­வது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யாத நிலை­மையே நில­வு­கின்­றது. இவர்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்­டிய அரசு நீண்­ட­கா­ல­மாக அமைதி காத்­தி­ருந்­து­விட்டு, ஒரு தசாப்த காலத்தின் பின்னர் அவர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள். விடு­த­லைப்­பு­லி­க­ளி­னாலும் பிடித்துச் செல்­லப்­பட்­டார்கள் என்று சாக்­கு­போக்கு கூறு­வது ஏற்­பு­டை­ய­தல்ல.

இத­னால்தான், இந்த விட­யத்தை சாதா­ரண விட­ம­யாகத் தட்­டிக்­க­ழித்­து­விட முடி­யாது எனக் கூறி காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி, காணாமல் போயுள்­ள­வர்­களின் உற­வி­னர்கள் தொடர்ச்­சி­யாகப் போராடி வரு­கின்­றார்கள். இந்தப் போராட்டம் மூன்று வரு­டங்­க­ளாகத் தொடர்­கின்­றது.

யுத்­தத்தின் பின்னர் நாட்டில் சுமுக நிலை­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்ட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தை அரசு ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. அதற்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கி உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் அரசு உறு­தி­ய­ளித்­துள்­ளது.

அந்த உறு­தி­மொ­ழிக்­க­மை­வாக ரணில் - மைத்­திரி கூட்­ட­ர­சாங்கம் உரு­வாக்­கிய காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­முறை வடக்கு–கிழக்­கிலும் ஏனைய இடங்­க­ளிலும் அலு­வ­ல­கங்­களைத் திறந்து, தனது செயற்­பா­டு­களை ஆரம்­பித்­தி­ருந்­தது. அந்த அலு­வ­லகம் தொடர்­பாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் மாற்றுக் கருத்தைக் கொண்­டி­ருந்த போதிலும், காணாமல் போன­வர்கள் விட­யத்தில் அர­சாங்கம் 'கவனம்' செலுத்­தி­யி­ருந்த நிலை­யி­லேயே 2019 ஜனா­தி­பதி தேர்­தலின் பின்­ன­ரான புதிய அர­சாங்கம், முரண்­பா­டான ஒரு நிலையில் காணாமல் போன­வர்கள் உயி­ரோடு இல்லை என கூறி­யி­ருக்­கின்­றது.

கேள்­விகள்
படைத்­துறை அதி­கா­ரி­க­ளி­னதும், அரச அதி­கா­ரி­க­ளி­னதும் பொறுப்பில் மட்­டு­மல்­லாமல் ஒட்­டு­மொத்­த­மாக (ஏனெனில் அர­சாங்­கமே விடு­த­லைப்­பு­லி­களை சர­ண­டை­யு­மாறு கோரி­யி­ருந்­தது) அர­சாங்­கமே பொறுப்­புள்ள நிலையில் மிகச் சாதா­ர­ண­மாகக் காணாமல் போன­வர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்றும், அவர்­களை விடு­த­லைப்­பு­லி­களே பிடித்துச் சென்­றார்கள் என்றும் நாட்டின் ஜனா­தி­பதி ஐ.நா. மன்­றத்தின் இலங்­கைக்­கான இணைப்­பா­ள­ரிடம் நேர­டி­யாகக் கூறி­யி­ருக்­கின்றார்.

அவ்­வாறு கூறி­யி­ருப்­பது, ஒரு வகையில் வேடிக்­கை­யான விட­ய­மா­கவும் மறு புறத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கிய மனித உயிர்கள் தொடர்­பி­லான பொறுப்­பையும் கடப்­பாட்­டையும் தூசாகக் கருதித் தட்­டிக்­க­ழிக்­கின்ற மனி­தா­பி­மா­ன­மற்ற தன்­மை­யா­கவும் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தின் இந்த நிலைமை குறித்து சர்­வ­தேச மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும், உள்­ளூரில் ஜன­நா­ய­கத்தின் மீதும் இன ஐக்­கி­யத்தின் மீதும் பற்­றுள்­ள­வர்­களும், தமிழ் அர­சியல் தலை­வர்­களும் தமது கண்­ட­னங்­களை வெளி­யிட்­டிருக்­கின்­றனர். அது மட்­டு­மல்­லாமல் ஜனா­தி­ப­தியின் கூற்­றுக்கு உரிய முறையில் அதி­கா­ர­பூர்­வ­மாக விளக்­க­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர்.

காணாமல் போயுள்­ள­வர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று வெறு­மனே கூற முடி­யாது. அவர்கள் எவ்­வாறு கொல்­லப்­பட்­டார்கள், யாரால் கொல்­லப்­பட்­டார்கள், எப்­போது கொல்­லப்­பட்­டார்கள், எவ்­வாறு கொல்­லப்­பட்­டார்கள், ஏன் கொல்­லப்­பட்­டார்கள், கொல்­லப்­பட்­டார்கள் என்றால் கொல்­லப்­பட்­ட­வர்­களின் சட­லங்கள் எங்கே, அந்த சட­லங்­க­ளுக்கு என்ன நடந்­தது, சட­லங்கள் புதைக்­கப்­பட்­ட­னவா, அவைகள் எரிக்­கப்­பட்­ட­னவா, அப்­ப­டி­யானால் அவற்றைச் செய்­தது யார், அவைகள் எங்கே புதைக்­கப்­பட்­டன அல்­லது எரிக்­கப்­பட்­டன, ஏன் அவ்­வாறு செய்­யப்­பட்­டன என்­பது போன்ற எண்­ணற்ற கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்பும் உள்­ளது.

இந்தக் கேள்­விகள் அனைத்­துக்கும் அரச தலைவர் என்ற ரீதியில் ஜனா­தி­ப­தி­யிடம் இருந்து பதில் கிடைக்­குமா என்­பது தெரி­ய­வில்லை. காணாமல் போன­வர்­களை மண்ணில் தோண்­டித்தான் பார்க்க வேண்டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பினர், ஓர் அர­சியல் கட்­சியின் தலைவர் என்­றதோர் அர­சியல் பொறுப்பில் உள்ள விமல் வீர­வன்ச பொறுப்­பற்ற முறையில் கூற முடி­யாது.

கொல்­லப்­பட்­ட­வர்கள் புதைக்­கப்­பட்ட இடத்தை அறிந்­தி­ருக்­கின்ற ஒரு நிலை­யி­லேயே அவ்­வாறு அதனைக் கூற முடியும். வீதியில் செல்­கின்ற ஒரு வழிப்­போக்­கனைப் போலவோ அல்­லது அர­சியல் அரட்­டைக்­காகக் கதை சொல்­கின்ற ஒரு­வரைப் போலவோ பொறுப்­பற்ற முறையில் காணாமல் போயுள்­ள­வர்கள் குறித்து விமல் வீர­வன்ச கருத்து வெளி­யிட முடி­யாது. இந்த விட­யத்தில் அவர் பொறுப்­பான பதில் கூறக் கட­மைப்­பட்­டுள்ளார்.

பழிச்­சொல்­லுக்கு ஆளா­காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

எனவே பொறுப்­பற்ற முறை­யி­லான கருத்­தாக அல்­லது உள் விட­யங்­களை நன்கு தெரிந்து கொண்டு அப்பட்டமான மனித உரிமை மீறல் மற்றும் மனி­தா­பி­மா­ன­மற்ற ஒரு செயல் என்ற வரை­ய­றையைக் கொண்ட ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள விடயம் குறித்து ஜனா­தி­ப­தியோ அல்­லது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரோ கருத்து கூற முடி­யாது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள அதன் அமர்வில் இலங்கை விவ­காரம் விவா­தத்­துக்கு அல்­லது கவ­னத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­ப­டும்­போது இந்த விடயம் குறித்து முக்­கிய கவனம் செலுத்­தப்­பட வேண்டும். காணாமல் போயுள்ள­வர்கள் தொடர்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள இந்த இரண்டு கருத்­துக்கள் தொடர்­பிலும் இலங்­கையின் சார்பில் அந்த அமர்வில் கலந்து கொள்­கின்ற பிர­தி­நி­தி­க­ளிடம் விரி­வான விளக்­கங்கள் கோரப்­பட வேண்டும்.

அந்த விளக்­கங்­களை வெறு­மனே அர­சியல் ரீதி­யி­லான சாக்குப் போக்­கான கருத்­துக்­க­ளாக மனித உரிமைப் பேரவை ஏற்­றுக்­கொள்ளக் கூடாது. மிகவும் பொறுப்­புள்ள முறை­யி­லான விளக்­கத்தை அவர்­க­ளிடம் இருந்து பெற வேண்­டி­யது அவ­சியம். அத்­துடன் அந்த விளக்­கத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான முழு விப­ரங்­க­ளையும் உட­ன­டி­யாக இலங்கைப் பிர­தி­நி­தி­க­ளிடம் இருந்து ஐநா மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாட்டுப் பிர­தி­நி­திகள் பெற்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் இலங்கைப் பிரதிநிதிகளிடம் இருந்து பெறுகின்ற விபரங்கள் விளக்கங்களின் அடிப்படையில் இந்த விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சர்வதேச அளவில் உரிய முறையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்படுவதையும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்த வேண்டும். அதன் ஊடாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைப்பதற்கும், இலங்கையில் இனிமேல் இவ்வாறு ஆட்கள் காணாமல் ஆக்கப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் வழி சமைக்கப்பட வேண்டும்.

காணாமல் போயுள்ளவர்கள் விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் தென்பகுதியைச் சேர்ந்த மனித உரிமை நேயமுள்ளவர்களும் கண்டன அறிக்கைகள் விடுவதுடனும், ஆர்ப்பாட்டங்களைச் செய்வதுடனும் நின்றுவிடக் கூடாது.

அரச தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள பொறுப்பற்ற முறையிலான கருத்துக்களுக்கும், அதன் அடிப்படையிலான அரசின் நிலைப்பாட்டுக்கும் எதிராக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுதியாகக் குரல் எழுப்ப வேண்டும். பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு, மறக்கடிக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போயுள்ளவர்கள் விடயத்தில் பொறுப்பேற்று பொறுப்பு கூறுவதற்கும், அது தொடர்பிலான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் உரிய அழுத்தத்தை அரசுக்குக் கொடுப்பதற்கு இதைவிட சரியானதொரு சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்கப் போவதில்லை.

எனவே சர்வதேச மட்டத்தில் - குறிப்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வு என்ற சர்வதேச அரங்கில் காணாமல் போயுள்ளவர்களின் விடயத்திற்கு நீதியும் நியாயமும் கிடைப்பதற்கான செயற்பாடுகளில் தமிழ்த்தரப்பினர் துரிதமாக ஈடுபட வேண்டும். அவ்வாறில்லாமல் இந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடுவார்களேயானால் தம்மை நம்பியுள்ள மக்களுக்கு உரிய நேரத்தில் உரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தவறிவிட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

- பி.மாணிக்­க­வா­சகம் -