கொரோனா வைரஸ் பரவலின் மையமான சீனாவின் வுஹானிலிருந்து நேபாளம் தனது நாட்டுப் பிரஜைகள் 175 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை  வெளியேற்றியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பாலும் மாணவர்களை உள்ளடக்கிய இந்த 175 பேரில் 134 ஆண்களும், 41 பெண்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

நேபாள அரசுக்கு சொந்தமான ஏயர்லைன்ஸ் ஊடாகவே இன்று அதிகாலை கத்மண்டுவின், திரிபுவான் சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்ததாக அந் நாட்டு சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மகேந்திர ஸ்ரேஸ்தா தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட அனைவரையும் நேபாள நகரமான பக்தாபூரில் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்படுபவர்கள் வைத்தியக் கண்காணிப்பில் 14 நாட்டுக்கள் வைக்கப்படவுள்ளதுடன், அவர்களிடம் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வைத்திய சோதனையின் பின்னர் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்றால் அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வுஹானில் உள்ள நேபாள் மாணவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருமாறு கோரி கடந்த வாரம் பெற்றோர்கள் சுகாதார அமைச்சின் முன் போராட்டம் நடத்தினர். 

திரும்பி வருபவர்களை தனிமைப்படுத்தலில் வைத்திருக்க கட்டிடங்கள் தயாரிக்க வேண்டிய நேரம் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் இதுவரை ஒரேயொருவர் மாத்திரம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo credit : Reuters