எதிர்வரும் பாராளுமன்றத்  தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 

   மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நம்பி செயற்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலேயே, தான் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

   பிரதான கட்சிகள் இரண்டும் தமது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாது, அவர்களை ஏமாற்றியுள்ளதாகவும் அஸாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

   புதிய கூட்டமைப்பில் இதயம் சின்னத்தில்  தேர்தலில் போட்டியிடுவற்கு சஜித் பிரேமதாஸவிற்கு அனுமதி வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தற்போது தனது நிலைப்பாட்டினை மாற்றி சஜித் பிரேமதாஸ யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

   ஆட்டின் தோலைப் போர்த்திய ஓநாயாக செயற்படுகின்ற ரணில் விக்ரமசிங்கவை இனியும் நம்பக்கூடாது.

   அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகளின் ஒத்துழைப்புடன் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும், அந்த  அறிக்கையில் மேலும்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.