யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 'டயமண்ட் பிரின்சஸ்' கப்பலில் மேலும் 70 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது 356 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதனால் ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 408 ஆக பதிவாகியுள்ளது.

கப்பலில் உள்ளவர்களிடம் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது.  அதன் பின்னர் 21 ஆம் திகதி வரை பரிசோதனை முடிவுகள் வெளியானதும், கப்பலில் உள்ள வைரஸ் தொற்றுக்குள்ளாகாத பயணிகளை தரையிறங்க அனுமதி வழங்கப்படவுள்ளதுடன், ஏனையோரை மருத்துவமனைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை கப்பலில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுமாறு அமெரிக்கா அறிவித்துள்ளது.  

இவ்வாறு வெளியேற்றப்படும் தமது பிரஜைகளை சிறப்பு விமானங்களினூடாக அமெரிக்காவுக்கு அழைத்து வந்து கலிபோர்னியாவில் உள்ள டிராவிஸ் விமானப்படை தளத்திலோ அல்லது டெக்சாஸில் உள்ள லாக்லேண்ட் விமானப்படை தளத்திலோ தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு வைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை கருத்திற் கொண்டு கனடாவும் கப்பலில் உள்ள தமது பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

photo credit : twitter