காதலர் தினத்தன்று மதுவரித் திணைக்களம் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் சட்டவிரோதமான முறையில் 100 க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளுக்க வெளிநாட்டு மதுபான விற்பனையில்  ஈடுபட்ட விற்பனையாளரை  கைது செய்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மதுவரித் திணைக்களத்தின் சிறப்பு செயல்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குருந்துவத்தை பகுதியில் அமைந்துள்ள மதுபான உரிமம் பெற்ற விற்பனை நிலையம் ஒன்றில் திணைக்களத்தின் அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று முற்றுகையிட்டுள்ளனர். இதன் போது 17-25 வயதுக்குட்பட்ட சுமார் 100-150 காதல் ஜோடிகள்  பல்வேறு மதுபானங்களை பயன்படுத்தியுள்ளனர். 

மதுவரி அதிகாரிகள் உடனடியாக அந்த வளாகத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், ஒரு கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 143.870 லீற்றர் வெளிநாட்டு மதுபானங்களையும், கணக்கில்  சேர்க்கப்படாத 55,950 லீற்றர்  வெளிநாட்டு மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுபான உரிமம் பெற்ற வியாபார நிலையத்தின் உரிமையாளர் மற்றொரு நபருடன் இணைந்து இந்த  விருந்தை ஏற்பாடு செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வியாபார நிலையத்தின் உரிமையாளர் விற்பனை உரிம நிபந்தனைகளை மீறியதற்காக ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என மதுவரி திணைக்களத்தின் சிறப்பு செயல்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மதுவரிதிணைக்களம் மெற்கொண்டு வருகின்றது.