அறிமுகமற்ற இருவர் சந்தித்தால் நலமா? என்று வினா எழுப்பும் முன், உங்களுக்கு சீனி இருக்கா? இல்லையா? என்று கேட்பதில் தான் அறிமுகமே தொடங்குகிறது. அந்த அளவிற்கு வயது வித்தியாசம் பார்க்காமல் பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

இதற்கு தீர்வு இல்லையா..? என்று கேட்டால் தீர்வு இருக்கிறது. நீரிழிவு நோய் இருக்கா? இல்லை? என்று முதலில் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்பவர்களில் தொண்ணூறு சதவீதத்தினரின்  மனதில் பயம் உண்டாகிறது. 

இதன் காரணமாகவே டைப்-2 எனப்படும் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். அத்துடன் டைப் 1 அல்லது டைப் டைப் 2 என எந்த நீரிழிவு நோயாக இருந்தாலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் ஆயுளில் எட்டு முதல் பத்து ஆண்டுகளைக் இழக்கிறார்கள் என்று ஒரு ஆய்வின் முடிவு, இணையத்தில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கிறது.

இந்நிலையில் நீரிழிவு நோயுடன் நூற்றாண்டு காலம் வாழலாம். ஆனால் இதற்குரிய சிகிச்சை பெறாவிட்டால் 100 நாட்களுக்குள் பாரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் வைத்தியர்கள்.

  அதே தருணத்தில் நீரிழிவு நோயைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்றும், நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொண்டு, வைத்தியர்கள் வழங்கும் பரிந்துரையை முழுமூச்சாக பின்பற்றினால், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, 100 ஆண்டுகளுக்கு மேலும் ஆரோக்கியமாக வாழ இயலும் என்கிறார்கள்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நூறாண்டுகள் வாழ வேண்டுமென்றா,ல் தங்களின் இரத்த சீனியின் அளவு 100 என்ற எண்ணிக்கைக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.