கிராமிய வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை நேரடியாகக் கண்டறியும் நோக்கிலும், எதிர்காலத்தில் வைத்தியசாலைகளினுடைய தேவைப்பாடுகளை முடியுமானளவு பூர்த்தி செய்யும் நோக்கிலும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தலைமையிலான குழுவினர்   விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் நேற்று மொரவெவ பிரதேசத்திலுள்ள மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை, மொரவெவ ஆரம்பச் சுகாதார வைத்திய பராமரிப்பு நிலையம் போன்றவற்றிற்கு விஜயம் செய்தனர்.

குறித்த விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து  எதிர்காலத்தில் நோயாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும் வைத்திய சாலைகளில் காணப்படும் சிற்றூழியன்கள்  எதிர் நோக்கும் பிரச்சினைகள்  மற்றும் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதேவேளை நோயாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நோயாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அத்துடன்  மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும்  சென்று  சிற்றூழியர்கள் நோயாளர்களைக் கவனிக்கும் விதங்கள் குறித்தும்  ஆராய உள்ளதாகவும் நோயாளர்களின் மனங்களைப் புண்படுத்தும் விதத்தில் செயற்படும் ஊழியர்களுக்குத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.