(ரொபட் அன்டனி)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு இரண்டு தடவைகள் கால நீடிப்புக்கு உட்பட்ட பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிவிட முடியாது. அது தொடர்பில் சர்வதேச நாடுகள் கவனமெடுக்க வேண்டியது அவசியமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜெனிவா மனித உரிமை அலுவலகத்தின் பிரதிநிதிகளையும் நேற்றைய தினம் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், 30–1 என்ற பிரேரணை முழுமையாக இலங்கையினால் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை குறித்த அறிக்கையும் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டினால் வெ ளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து ஆராயும் நோக்கில் தற்போது ஜெனிவா சென்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அங்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போதே மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தியிருக்கின்றார்.
நேற்றுக்காலை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் பிரதிநிதிகளை சந்தித்த எம்.ஏ. சுமந்திரன் நேற்றுமாலை ஜெனிவாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார்.
இது தொடர்பில் ஜெனிவாவிலிருந்தவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் கேசரிக்கு தகவல் தருகையில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மற்றும் ஜெனிவாவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது. எமது நிலைப்பாட்டை நான் தெ ளிவாக எடுத்துரைத்தேன்.
இதேவேளை ஜெனிவாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேச்சு நடத்தினேன். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தேன்.
இலங்கையின் புதிய அரசாங்கம் 30–1 என்ற பிரேரணையை ஏற்க மறுத்தால் அல்லது அதில் ஏதாவது மாற்றங்களை செய்தால் உறுப்பு நாடுகள் அது தொடர்பில் என்ன செய்யவேண்டும் என்று நான் எடுத்துக்கூறினேன்.
பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை 30–1 என்ற பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும். அடுத்தவருடம் மார்ச் மாதம் வரை இந்த பிரேரணை சர்வதேச கண்காணிப்பில் இருக்கும். எனவே உறுப்பு நாடுகள் இது தொடர்பில் கவனம் எடுக்கவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் இறுக்கமானவையாக இருப்பது அவசியமாகும். அரசாங்கம் பிரேரணையிலிருந்து விலக முடியாது. அவ்வாறு பிரேரணையை இலங்கை அரசாங்கம் ஏற்காவிடின் அல்லது ஏதாவது ஒரு ஏற்பாட்டை எதிர்த்தால் அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்பது குறித்தும் பேச்சு நடத்தினோம். இந்த சந்திப்பு பரந்துபட்ட ரீதியில் அமைந்தது. பெரும்பாலான உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் என்னுடனான இந்த சந்திப்பில் பங்கேற்றனர். நான் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைப்பாட்டை அவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தேன். மேலும் பல்வேறு தரப்பினரையும் ஜெனிவாவில் சந்தித்து பேச்சு நடத்தினார்.