இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு காத்து வாக்குல ரெண்டு காதல்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தை இயக்கினார். 

இதன் பிறகு தற்போது ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, முதல் பிரதி அடிப்படையில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.

இப்படத்தின் டைட்டிலுக்கு மோஷன் போஸ்டரை  ஃபர்ஸ்ட் லுக்காக காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதியான நேற்று இணையத்தில் வெளியானது. இதற்கு தற்போது பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

 இதனிடையே இந்தப் படம் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்றும், இது முக்கோண காதல் கதையை கொமடியுடன் சொல்லும் புதிய திரைக்கதை என்றும் படக்குழுவினர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.