சாய்ந்தமருது நகரசபை உதயமானது : பிரசுரமானது வர்த்தமானி அறிவித்தல்

15 Feb, 2020 | 07:22 AM
image

சாய்ந்தமருது நகரசபை 2022, மார்ச் மாதம் 20 ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியானது.

1987 ஆம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 உள்ளூராட்சி சபைகள் காணப்பட்டது. அந்த நான்கு சபைகளும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா கொண்டுவந்த பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன.

அதனை மீண்டும் பிரித்து சாய்ந்தமருது பகுதியை ஒரு நகர சபையாக உருவாக்கி தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் நவம்பர் எழுச்சி, டிசம்பர் புரட்சி என பல்வேறு போராட்டம் நடாத்தியதுடன், கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகரசபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாசல் சுயேற்சை குழுவை தோடம்பழம் சின்னத்தில் களமிறக்கி அதில் சாய்ந்தமருதில் உள்ள 06 வட்டாரங்களையும் வென்று விகிதாசார முறையில் 03 என மொத்தம் 09 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும்.

 

கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் ஆகியோர் நகர சபை தருவதாக பகிரங்கமாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி இருந்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 06 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து மொட்டின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளர்களாக இருந்தனர்.

தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் , முயற்சியின் காரணமாக சாய்ந்தமருது நகரசபையை மலர செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மகிழ்ச்சியை மக்கள் பட்டாசு கொளுத்தி, வானவேடிக்கைகள், இனிப்பு வழங்கி கொண்டாடி வருவதுடன் இந் நகரசபையை உருவாக்க காரணமாக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுக்கு மகத்தான வரவேற்பை வழங்கி கௌரவிக்க தயாராகி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right