கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் 2020 டோக்கிய ஒலிம்பிக்கானது திட்டமிட்டவாறு நடத்தப்படும் என்று ஒலிம்பிக் நிர்வாகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சீன நகரமான வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகளவில் 64,000 க்கும் அதிகமான மக்களை பாதிப்படையச் செய்துள்ளதடன், 1,491 பேரை உயிரிழக்கவும் செய்துள்ளது.

இந் நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்கு அமைவாக ஒலிம்பிக் விளையாட்டுக்களை இரத்து செய்வதோ அல்லது அதனை ஒத்தி வைக்க தற்போது வரை எந்த திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகத்தின் உறுப்பினர் ஜோன் கோட்ஸ் தெரிவித்துள்ளார். 

அதன்படி ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஒலிம்பிக் போட்டிகளானது தடையின்றி இடம்பெறுவதுடன், ஜப்பான் வரும் சீனர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.

சீன அணியினர் இப்போது பெரும்பாலும் சீனாவிற்கு வெளியே உள்ளனர். பயிற்சி மற்றும் தகுதி நிகழ்வுகளுக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஜப்பான் வரத் திட்டமிட்டால், சீனாவைத் தவிர வேறு நாட்டிலிருந்து அவர்கள் வரலாம். அதில் எமக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும் கோட்ஸ் மேலும் கூறினார்.

இதேவேளை கொரோனா வைரஸ் வெடிப்பால் ஆசியாவில் பல விளையாட்டு நிகழ்வுகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 19 ஆம் திகதி திட்டமிடப்பட்ட சீன 'கிரேண்ட் பிரிக்ஸ்' கார்ப் பந்தையம் இந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது, மேலும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் செவன்ஸ் றக்பி போட்டிகளும் ஒக்டோபருக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.