இலங்கை அரசாங்கம்; வலுக்கட்டாயமாக  காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு  நீதி உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவற்றை வழங்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது

கொழும்பில் இன்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இன்றைய நினைவுகூறல் என்பது தங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த பதிலுக்காக  வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் வலிமிகுந்த நீண்ட கால காத்திருப்பை நினைவுபடுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

உலகின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் காதலர் தினத்தை கொண்டாடும்இந்த தருணத்தில் இலங்கையில் காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள்குடும்ப உறவுகளை நினைவுகூறுவதுடன் அவர்கள் குறித்த பதில்களை கேட்க முனைகின்றனர் என மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள்  உண்மையை அறிவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளிற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள பிராஜ்பட்நாயக் இதன் ஆரம்பமாக அதிகாரிகள் இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தின் இறுதியில் படையினரிடம் சரணடைந்தவர்களி;ன் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடம் கையளிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணாமல்போகச்செய்யப்படுதலிற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் குறித்து  அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.