(தி.சோபிதன்)
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட யாழ். குடாநாட்டுக்கான குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
குடாநாட்டுக்கான குடிநீர் பிரச்சினை கடந்த பல தசாப்தங்களாக கானல் நீராகவே காணப்படுகின்றது.குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் தீவகப் பகுதிகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக இது இருந்து வருகின்றது.
தங்களால் குறிப்பிடப்படும் கப்பூது வெளி, அந்தணன் வெளி குளம் அமைத்தல் தொடர்பாக நாம் விமர்சிக்க விரும்பவில்லை. எனினும் பாலியாற்று வடிநிலத்திலிருந்து யாழ். குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதற்கான திட்டம் தொடர்பாக 04.10.2018ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வில் ஒரு முன்மொழிவு எம்மால் முன்வைக்கப்பட்டு முதலமைச்சரால் வழிமொழியப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடிநீர் விநியோகம் தொடர்பாக மாகாண சபை நிறைவேற்றிய ஒரே தீர்மானமும் இதுவே. இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஆளுநருக்கு நாம் எழுதிய 22.01.2019ஆம் திகதிய கடிதத்திற்கு தங்கள் அவதானம் கோரப்படுகின்றது. எனவே ஏற்கெனவே சாதகமான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தை துரிதமாக நிறைவேற்றி வைக்க தொடர் நடவடிக்கை எடுத்துதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.