பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு அண்மையில் பொலிஸ் கட்டளைத் தளபதியொருவரும் அவரது மனைவியும் ஐ.எஸ். தீவிரவாதியொருவரால் திங்கட்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து பொலிஸார் அதிரடி நடவடிக்கையொன்றை முன்னெடுத்து அந்தத் தீவிரவாதியை சுட்டுக் கொன்று அவரால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 3 வயது குழந்தையை மீட்டுள்ளனர். 

பாரிஸின் வடக்கே யவெலெயின்ஸ் பிராந்தியத்தில் மக்னவில்லே எனும் இடத்திலுள்ள அந்தப் பொலிஸ் கட்டளைத் தளபதியின் வீட்டினுள் துணிகரமாக பிரவேசித்து ஐ.எஸ். தீவிரவாதியொருவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளமை முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது சந்தேகத்துக்கிடமற்ற தீவிரவாத தாக்குதல் என அந்நாட்டு ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் கலந்துரையாட செவ்வாய்க்கிழமை அவசர பாதுகாப்புக் கூட்டமொன்றைக் கூட்டினார். 

லரோஸி அபல்லா (25 வயது) என்ற தீவிரவாதியே பொலிஸ் அதிகாரியான ஜீன் பப்டிஸ்ட் சல்வெயிங் (42 வயது) மற்றும் அவரது மனைவி ஜெஸ்க்கா எஸ். ஆகியோரை படுகொலை செய்துள்ளார். 

இதனையடுத்து அங்கிருந்த அவர்களின் 3 வயது குழந்தையை பணயக்கைதியாக பிடித்து வைத்துக்கொண்ட லரோஸி அபல்லா, ' இந்தப் பாலகனை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை' என தனது பேஸ்புக் இணையத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் ஜீன் பப்டிஸ்ட் சல்வெயிங் வயிற்றில் 9 தடவைகள் கத்தியால் குத்தியுள்ளார். ஜெஸ்க்கா எஸ். மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து செயற்படுவதாக பேஸ்புக் இணையத்தளத்தில் 13 நிமிட காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டதையடுத்தே அவர் இந்தப் படுகொலைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2011 ஆம் ஆண்டிலிருந்து லரோஸி அபல்லாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2013 ஆம் ஆண்டு தீவிரவாத செயற்பாடுகளுக்கு தயாராகியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. 

அதன்போது பாகிஸ்தானிலுள்ள ஜிஹாதிகளுக்காக ஆட்சேர்ப்பதில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அதில் 6 மாத சிறைத்தண்டனை இரத்துச் செய்யப்பட்டது. 

அவர் முதலில் கையில் கத்தியுடன் குறிப்பிட்ட இராணுவக் கட்டளைத் தளபதியின் வீட்டிற்கு வெளியிலிருந்து கடவுள் மகா பெரியர் என்று கூறிக் கோஷம் எழுப்பியதாகவும் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். அவர் அதன் பின் அந்த வீட்டினுள் பிரவேசித்து பொலிஸ் கட்டளைத் தளபதியின் வாழ்க்கைத் துணையையும் அவர்களது குழந்தையையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்துள்ளார். 

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அமாக் செய்தி முகவர் நிலையம் தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக உரிமைகோரியுள்ளது.மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாரிஸ் நகரில் 130 பேர் பலியாவதற்கு காரணமான தாக்குதலையடுத்து அந்நதட்டில் அவசரகால நிலைமையோன்று பிறப்பிக்கப்பட்டது. 

பிரான்ஸுக்கு முக்கிய அச்சுறுத்தலாகவுள்ள 100 க்கு மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கஸினியவ் தெரிவித்துள்ள நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

லரோஸி அபல்லாவிடமிருந்து பயணக்கைதிகளை விடுவிக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியிருந்தது.