இலங்கையின் மனித உரிமை நிலைமை மற்றும் உள்ளக விசாரணைப்  பொறிமுறை தொடர்பில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் எதிர்வரும்  29 ஆம் திகதி  வெளியிடவுள்ள வாய்மூல அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகிவருகின்றது. 

குறிப்பாக செய்ட் அல் ஹுசேனினால் வெளியிடப்படவுள்ள வாய்மூல அறிக்கையானது உள்ளக விசாரணை பொறிமுறை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமையும் என்ற விடயம்  அவரின்  நேற்று முன்தின உரையிலிருந்து  தெரியவருவதால்  அரசாங்கம் இந்த விடயத்தை ஆராய்ந்துவருகின்றது. 

அதன்படி எதிர்வரும்  29 ஆம் திகதி  ஜெனிவாவில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர  உள்ளக விசாரணை பொறிமுறை  தொடர்பான முன்னேற்றம் மற்றும்  அரசாங்கம் இது  தொடர்பில் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும்  விளக்கமளிக்கவுள்ளார். 

மேலும் உள்ளக விசாரணை பொறிமுறையானது எவ்வளவு காலத்துக்கு இயங்கும் மற்றும் அதற்கான ஆணை எவ்வாறு அமையும் என்றும் அதற்கான  அடிப்படை  கட்டமைப்பு குறித்தும்  அமைச்சர் மங்கள சமரவீர விளக்கமளிப்பார். 

இதேவேளை    எதிர்வரும்  28 ஆம் திகதி  ஜெனிவா செல்லவுள்ள     வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர    ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

இதன்போது  செய்ட் அல் ஹுசேன் கோரியுள்ள நீதி வழங்கும் செயற்பாட்டுக்கான உபாய மார்க்கம் குறித்தும் கலந்துரையாடப்படும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.  அத்துடன்  உள்ளக விசாரணை பொறிமுறையின்  வடிவம் குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர  செய்ட் அல் ஹுசேனுக்கு விளக்கமளிக்கவுள்ளார். 

நேற்று  முன்தினம் ஆரம்பமான  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய  செய்ட் அல் ஹுசேன்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட  பிரேரணையை அமுல்படுத்துவதற்காக       இலங்கை அரசாங்கத்திடமிருந்து  பரந்துபட்ட உபாயமார்க்கம் தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார். 

இதேவேளை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  30 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர்கள்  சட்டத்தரணிகளுடன் உள்நாட்டு  நீதித்துறை கட்டமைப்புடன் கூடிய     விசாரணை  பொறிமுறையை  முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. 

மேலும்  ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 32 கூட்டத் தொடரின்போது வாய்­மொழி மூல அறிக்­கையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் சமர்ப்­பிக்க வேண்டும். பரிந்­து­ரைகள் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­பது குறித்து  34 கூட்டத் தொடரில் முழு அளவில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு தீர்­மானம் நிறை­வேற்­றப்­படவேண்டும் என்றும்  அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதன்படியே இம்முறை 32 ஆவது கூட்டத் தொடரில்  இலங்கை குறித்த வாய்மூல அறிக்கை   ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால்  பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.