கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சில முக்கிய கேள்விகளுக்கு  விடையளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஜனாதிபதி தேர்தல் ஏன் இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டது? ஆகிய கேள்விகளுக்கு கடந்த அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக விவகாரங்களில் இலங்கை என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கொழும்பில்  நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.இந்தப் பிரச்சினைகள் சர்ச்சைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியாது.கடந்த காலங்களில்  உலகின் பலம்பொருந்திய நாடுகளும் தலைவர்களும் இலங்கை மீது நன்மதிப்பு கொண்டிருக்கவில்லை.   

இந்தப் பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்டு எடுப்பதற்கு எமது அரசாங்கம் முயற்சித்த போது சர்வாதிகாரிகள் நாட்டை தாம் காட்டிக் கொடுப்பதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

சந்தர்ப்பவாதிகள் இலங்கையில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாகவும் போலியான பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.இலங்கையின் வெளிவிவகார கொள்கை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றது.  

எவ்வாறெனினும் எந்தவொரு நபரினதும் கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையில் ஆட்சி நடத்தப்படாது.இலங்கை மீது தற்போது சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை.   

எனினும், இலங்கையில் மனித உரிமைகள் பேணப்பட வேண்டுமெனவும் சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் சர்வதேசம் விரும்புகின்றது என்றார்.