‘மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தில் நடித்த பிறகு இருபது இலட்ச ரூபாய் சினிமாவில் சம்பாதிக்கிறேன்’ என்று அப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அண்டனி தெரிவித்திருக்கிறார்.

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘கல்தா’. இந்த படத்தில் அறிமுக நாயகன் சிவ நிஷாந்த், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ பட புகழ் நடிகர் அண்டனி, தேசிய விருது பெற்ற நடிகர் அப்புகுட்டி, புதுமுக நடிகை ஐரா ஜெயின், திவ்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜெய் கிரிஷ் இசையமைத்திருக்கிறார். கவிபேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. 

இதில் பங்கு பற்றி பேசிய நடிகர் அண்டனி,“ நான் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் மூலம் அறிமுகமானேன்.அந்தப் படத்தில் அறிமுகமான பிறகு இதுவரை 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சிறப்பு அதிதியாக பங்குபற்றியிருக்கிறேன். அத்துடன் பல படங்களில் நடிக்க வைப்பதற்காக அட்வான்ஸ் தொகையும் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் இதுவரை 20 இலட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறேன். 

இதையெல்லாம் எடுத்துக்கூறி இந்த நிலையை கெடுத்துக் கொள்ளாமல் என்னுடைய கதாபாத்திரம் இருந்தால் நடிக்கிறேன் என்று இயக்குனர் ஹரி உத்ராவிடம் கூறினேன். அவரும் இதையெல்லாம் கேட்ட பிறகு, குணா என்ற கள போராளி வேடத்தை எமக்கு கொடுத்திருக்கிறார் . இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் நடிகர் சிவநிஷாந்த் எதிர்காலத்தில் நட்சத்திர அந்தஸ்தை பெறும் நடிகராக உயர்வார் என்று எதிர்பார்க்கிறேன். 

அதற்காக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ கழிவுகளையும், மாமிச கழிவுகளையும் அண்டை மாநிலங்களிலிருந்து எம்முடைய தமிழக மண்ணில் இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்லும் சமூக விரோதிகளை எதிர்த்து, அந்த மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் போராடுகிறோம். இந்த கதைக்களம் புதிதாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். அத்துடன் இதுகுறித்த இயக்குனரின் சமூக பொறுப்புணர்வு எமக்கும் இருப்பதாக நினைத்து இப்படத்தில் நடித்திருக்கிறேன்.” என்றார்.

‘கல்தா’ படம் இம்மாத இறுதியில் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.