பொதுத் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச தலை­மையில் அமை­ய­வுள்ள கூட்­ட­ணியில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி அதன் வேட்­பா­ளர்­களை கள­மி­றக்கும் எனதொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் எம்.பி. தெரி­வித்தார்.

நேற்றைய தினம் பத்­தனை மவுண்ட்­வேர்ணன் தோட்­டம் ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் புதிய ஆல­யத்­துக்­கான அடிக்கல் நாட்டும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் சோ. ஸ்ரீதரன் உட்­பட தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கலந்து கொண்ட  இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

கடந்த நான்­கரை வரு­டங்­க­ளாக நான் அமைச்­ச­ராக இருந்த போது ஆயிரங்கணக்­கான வீடு­களைக் கட்டி முடித்­துள்ளேன். அதற்கு முன்­ன­தாக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நூறு நாள் வேலைத் திட்­டத்தில் சுமார் 500 வீடு­களைக் கட்டிக் கொடுத்து அவற்றை மக்கள் பாவ­னைக்கு கைய­ளித்­துள்ளேன்.

நான் உங்­களில் ஒருவன். தேர்தல் களத்தில் வாக்­கு­களைப் பெற்று அமைச்­ச­ரான பின்னர் மக்­களை ஏமாற்­ற­வில்லை. அவர்கள் நலன் சார்ந்த பல்­வேறு வேலைத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்திக் காட்­டி­யுள்ளேன். இந்­திய அர­சாங்­கத்தின் 4000 வீடுகள் கட்டி முடிக்­கப்­பட்டு அவற்றில் 1500 வீடுகள் பய­னா­ளி­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இன்னும் 2500 வீடுகள் கைய­ளிக்க வேண்­டிய நிலையில் தயா­ராக உள்­ளன. அவற்­றுக்கு மின்­சாரம், குடிநீர், பாதை வச­தி­க­ளுடன் விரைவில் மக்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு கிடைப்­பதை வர­வேற்­கிறோம். அதே­நேரம், இங்­குள்ள அமைச்­சர்கள் சிலரும், நவீன் திசா­நா­யக்­கவும் சேர்ந்து அர­சாங்கம் வழங்க இருந்த சம்­பள உயர்வை தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்க விடாமல் செய்து விட்­டதை நாம் மறந்து விட முடி­யாது. அவ்­வாறு சம்­பள உயர்வு கிடைத்து விட்டால் அதைப் பெற்றுக் கொடுத்த திகாம்­ப­ரத்­துக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்று அதைக் கிடைக்க விடாமல் செய்து விட்­டார்கள். சம்­பள உயர்வு என்­பது தேர்­தலை நோக்­க­மாகக் கொண்டும் இருக்கக் கூடாது. அதே­நேரம் சம்­பள உயர்வு என்ற போர்­வையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலைச் சுமையை ஏற்­ப­டுத்­து­வ­தையும், கூடு­த­லான கொழுந்து பறிக்க வேண்டும் என்று நிர்ப்­பந்­திக்­க­ப்ப­டு­வ­தையும் தொழி­லா­ளர்­க­ளுக்கு அரைப்பேர் போடு­வ­தையும்  நாம் அனு­ம­திக்க முடி­யாது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நாம் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமோ­க­மாக வெற்றி பெற்­றுள்ளோம். தமிழ் முற்­போக்கு கூட்­டணி மீது நம்­பிக்கை வைத்து மக்கள் வாக்­க­ளித்­துள்­ளார்கள். அதே அடிப்­ப­டையில் சஜித் பிரே­ம­தா­சவின் தலை­மையில் அமை­ய­வுள்ள கூட்­ட­ணியில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்கள் நுவ­ரெ­லியா, கண்டி, கொழும்பு, பதுளை முத­லான மாவட்­டங்­களில் போட்­டி­யி­ட­வுள்­ளார்கள். கடந்த தேர்­தலில் எமக்கு வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்த மக்­க­ளுக்கு உண்­மை­யான சேவை­களை வழங்­கி­யுள்ளோம். அதேபோல், மீண்டும் சேவை செய்யக் காத்திருக்கின்றோம்.

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது. கடந்த நான்கரை வருட காலமாக நாம் செய்ததை விட இன்னும் கூடுதலான சேவையை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க மக்கள் எம்மவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.