(எம்.ஆர்.எம்.வஸீம்)

இந்திய அரசாங்கத்திடம் கடன் தவணையை செலுத்த கால அவகாசம் கேட்டதில் தவறு இல்லை. என்றாலும் அதனை பகிரங்கப்படுத்தியதன் மூலம் எமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

நாட்டில் பாரிய  பொருளாதாரப் பிரச்சினை இருந்துவருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் வெளிநாடுகளுக்கு பாரியதொரு தொகை கடன் செலுத்தவேண்டி இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணையை குறிப்பிட்டதொரு காலத்துக்கு பிற்படுத்தி தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பார். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கடன் தவணையை பிற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்ததாக பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். 

இது எமது நாட்டின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏறபடுத்தும் செயலாகும். பெற்ற கடனை உரிய தவணைக்கு செலுத்த முடியாத நாடு என்ற பெயர் சர்வதேசத்துக்கு இதன்மூலம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பிரதமரின் இந்த நடவடிக்கையால் கடன் உதவிகளை தந்திருக்கும் ஏனைய நாடுகளும் தற்போது அச்சமடைந்து கடனை விரைவாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கும்.