மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் வீதி சந்தியில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் எனப்படும் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதராவளரும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுமான எம்.ஐ.நாசர் மற்றும் ஏ.ஜே.றிஸ்வி ஆகியோருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தன்னை வழிமறித்து தாக்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் எனப்படும் எச்.எம்.எம்.முஸ்தபா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மூவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.