பாடசாலைகளில் உளவளத்துறையின் அவசியம்

11 Feb, 2020 | 04:17 PM
image

பிள்ளைகள் என்போர் நன்மை தீமை அறியா இளஞ்சிட்டுக்களாகும். தீமை அறியா அவர்கள் பெற்றோர், பெரியோர், அயலவர், நண்பர்கள், சமூகம் என பல சமூக மட்டங்களிலிருந்தே ஒவ்வொரு விடயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். அவர்களை முறையாக வழிநடாத்துவதில் பெற்றோரின் பங்கு மிகவும் மேலோங்கியுள்ளது.

எப்பொழுதுமே குழந்தைகள் பெற்றோரின் அன்பையும், அரவணைப்பையும் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றனர். பெற்றோரின் பேச்சுகள், செயற்பாடுகளை மிக உன்னிப்பாக அவதானித்து அவற்றை தன்னுள் கிரகித்துக் கொள்வதிலும், அவற்றை பின்பற்றுவதற்கும் இந்த குழந்தைகள் பெரிதும் அக்கறை காட்டுகின்றனர்.

அதேபோன்று சமூகமயமாக்கல் எனும் கட்டத்தினை பெரியவர்களாகும் போது அவர்கள் கட்டாயம் எதிர்கொள்வார்கள். பிள்ளைகள் அயலவர்களுடன் பழகுவதிலும்,ஏனையோருடன் பேசுவதிலும் வித்தியாசமான சூழ்நிலைகளை கடப்பதற்கு நேரிடுவதுடன், சில சந்தர்ப்பங்களில் ஒதுக்கப்படுவதுடன், தனிமைக்குத் தள்ளப்படும் சூழ்நிலைகளும் ஏற்படலாம். அதேபோல் பிள்ளைகளை கல்வியைப் பயில்வதற்காக பாடசாலைகளில் சேர்த்து விட்டால் இவை எல்லாம் சரியாகிடும், அத்துடன் தங்களின் கடமைப் பொறுப்பு நிறைவேறிவிட்டது என்று பெற்றோர் கருதுவார்களாயின் அது உண்மையில் தவறான ஒரு சிந்தனை. ஒருசில பிள்ளைகள் அவ்வாறு முன்னேற்றம் கண்டாலும் அனைவருக்கும் இது பொருந்தாது.

இவற்றுக்கு பல காரணங்கள் காணப்பட்டாலும் உளநலம் பற்றிய குறைவான அறிவே முதன்மையாக காணப்படுகின்றது. இவற்றுக்கு நேரடியாக பெற்றோரை குறைகூற முடியாது. பிள்ளைகளின் உளநலத்தின் முக்கியத்துவம் பற்றி பாடசாலைகள், வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்கள் என எங்கெல்லாம் சிறுவர்களும் பெற்றோரும் வருகை தருவார்களோ அங்கெல்லாம் சிறுவர்களின் உளநலம் தொடர்பாக கூடுதலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாம் சாதாரணமாக பெற்றோரிடம் சிறுவர்களின் உளநலம் எனும் தலைப்பில் உரையாட ஆரம்பிக்கும்.

போதே அவர்களின் எண்ணம் எனது பிள்ளை உள ரீதியாக பாதிக்கப்பட்டவரா? உளநலவாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்களா? என எண்ணங்கள் வேறு திசையினை நோக்கி செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைகாரணம் கணிசமான பெற்றோருக்கு போதிய தெளிவின்மையே ஆகும்.

குறிப்பாக பாடசாலைகள் கல்வி போதிக்கும் இடமாக மாத்திரமின்றி பிள்ளைகளின் கல்வி மற்றும் பொது அறிவு, உள மேம்பாடு, சமூக ஒன்றிப்பு என வளர்ச்சி முழுவதும் பங்குகொள்ளும் ஒரு தளமாக அமையவேண்டும். பெரிய பாடசாலைகளில் உளவளதுறையாளர்கள் காணப்படினும் கூடுதலான பாடசாலைகளில் அவ் இடைவெளி இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படுகிறது. இவ் இடைவெளிகள் நிவர்த்தி செய்யப்படவில்லை எனின் இதன் மூலம் பல பாடசாலை மாணவர்களின் உள ரீதியான சவால்களுக்கு தீர்வின்றி அவர்கள் பாதகமாக அல்லது தவறான வழிகளை தேர்வு செய்யக்கூடிய அபாய நிலை உருவாகும்.

உளவளத்துறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமின்றி குறித்த மாணவர்களது பெற்றோர்கள், சக பாடசாலை ஆசிரியர்கள் என அம்மாணவர்களுடன் நேரடியாக தொடர்புபடும் அனைவரையும் வழிநடத்த முடியும். இதன் இடைவெளி காரணமாகவே பெற்றோர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான அல்லது ஏதேனும் மோசமான அனுபவத்துக்கு முகங்கொடுத்த பிள்ளைகளுக்கு பேய், சாத்தன் பிடித்துவிட்டது என கூறி தேவையற்ற விடயங்களில் ஈடுபடுத்தி அவர்களை மேலும் உள ரீதியான தாக்கத்துக்கு உள்ளாக்குகின்றோம். குறித்த பிள்ளைகளுக்கு முறையான உளவளத்துறை சேவைகளை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியுமானால் அவர்களின் எதிர்காலம் சுபீட்சமாக அமையும்.

எனவே வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் இவ் வெற்றிடங்கள் குறித்தும் இதன் தேவை குறித்தும் தமது மேலதிகாரிகளுக்கு எடுத்துரைத்து அவ் இடைவெளிகளை கூடிய சீக்கிரம் நிவர்த்தி செய்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

அதேபோல் அரசாங்கம் தனது பொறுப்பினை உணர்ந்து மீதமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தகுதியான உளவளவாளர்களை நியமிக்க முறையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

பிள்ளைகளின் ஆளுமை விருத்தி செய்வதில் கூடிய பங்களிப்பு செலுத்துவது அவர்களது உளநலமே என்பதை புரிந்துகொண்டு உடல் நலத்துக்கு கொடுக்கும் அதே முன்னுரிமையினை உளநலத்துக்கும் கொடுத்து எதிர்கால சிறந்த சந்ததிகளை உருவாக்க பாடசாலைகள் அடித்தளமாக அமைய வேண்டும்.

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை

குறிப்பிடத்தக்கது.

Kuwaldeen Rasool, Kandy

முக்கிய செய்திகள்

icon-left
icon-right