கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீனப் பெண் தொடர்பான பல வைத்திய சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

43 வயதான குறித்த சீன நாட்டுப் பிரஜையானவர் தற்போது பூரண குணமடைந்த நிலையில் கொழும்பு, தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந் நிலையில் பொரளையில் உள்ள வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து இவர் தொடர்பான சோதனை அறிக்கைகளை எதிர்பார்த்துள்ளதாக ஐ.டி.எச். வைத்தியசாலையின் நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

அத்துடன் இந்த சோதனை முடிவுகள் திருப்திகரமாக அமைந்தால், அடுத்த இரண்டு நாட்களில் சீனப் பிரஜையை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த சீனப் பிரஜை கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.