பொலிஸ் வாகனத்திற்குள் குழந்தை பிறந்த சம்பவமொன்று கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இம் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 

குழந்தையை பிரசவித்த பெண்ணிற்கு இம்மாதம் 23 ஆம் திகதி பிரசவத் திகதியாக வைத்தியர்கள்  அறிவித்திருந்த போதிலும் அதற்கு முன்னதாகவே அவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

பிரசவமடைந்த கர்ப்பிணிப்பெண் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து குறித்த கர்ப்பிணிப் பெண்ணை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துவந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கட்டுநாயக்க அதிவேக வீதியில் வைத்து குறித்த பெண்ணை அழைத்து வந்த வாகனத்தின் டயரில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாகனத்தில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை பேலியகொட பகுதியில் வைத்து அவதானித்த கட்டுநாயக்க அதிவேக வீதி பொலிஸார், உடனடியாக குறித்த பெண்ணை பொலிஸ் வாகனமொன்றில்  ஏற்றி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர். 

இந்நிலையில், அழைத்துச் சென்ற வழியில் குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பொலிஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
அதன் பின்னர் பொலிஸார் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் குறித்த பெண் மற்றும் குழந்தையை அனுமதித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கருத்து தெரிவிக்கையில், 
பொலிஸார் தங்களது வேலையை பொருட்படுத்தாமல் இரு உயிர்களையும் காப்பாற்றியுள்ளனர். 
இது தற்போதைய சமூகத்திற்கு சிறந்த உதாரணமாகும். பொலிஸாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.