நாட்டின் அனைத்து காணிகளினதும் நில அளவைப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

மொத்த காணி அலகுகளின் எண்ணிக்கை 14 மில்லியன் என இனங்காணப்பட்டுள்ளது. கடந்த 20 வருட காலப்பகுதியில் அவற்றில் 10 வீதமே அளவீடு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வளவு அதிக காலத்தை செலவிடாது எஞ்சிய 90% வீதமான காணிகளையும் உடனடியாக அளவீடு செய்து முடிக்குமாறு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி, அதற்குத் தேவையான வசதிகளை உடனடியாக நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

முறையான அளவீட்டின் பின்னர் அனைத்து காணி அலகுகளுக்குமான உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது ஜனாதிபதி காணி அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பிரச்சினைகளுக்குரிய மற்றும் எல்லைகள் இல்லாத காணிகள் இதன் கீழ் தீர்த்து வைக்கப்படவுள்ளன. நவீன அளவை இயந்திரங்கள், ட்ரோன் கெமராக்கள் உள்ளிட்ட தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அளவையியல் திணைக்களத்தின் மனித வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யும் பட்டதாரிகளை ஈடுபடுத்துவது குறித்தும்  தன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து அளவைகளையும் ஒரே தரவு முறைமையினுள் கொண்டு வந்து எந்தவொருவருக்கும் தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க அளவையியல் ஆணையாளர் எஸ்.டி.பி.ஜே.தம்பேகம ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.