நாடளாவிய ரீதியில் அரச பேருந்துகளில் ஏற்படும் பயணசீட்டு மோசடியினால் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபா வரையில் நஷ்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.

நாடு முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 107  டிப்போக்கள் காணப்படுகின்றன. அதில்  சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்தின்  நடத்துனர்கள்  மேற்கொள்ளும் பயணசீட்டு மோசடி காரணமாக இந்த இழப்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில்  திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கென்று குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது. அந்த திடீர் சோதனை கடந்த வாரங்களில் முன்னெடுக்கப்பட்டது. இதில் ஒரு கட்டமாக கம்பஹா டிப்போவுக்கு சொந்தமான கடவத்தை - மாத்தறை அதிவேக மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்தில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

அதன் போது பேருந்தின் நடத்துனர்  பல்லாயிரம் கணக்கான ரூபா பயணசீட்டு மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட பேருந்து நடத்துனரை உடனடி வேலைநீக்கம் செய்வதற்கும்நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்மேலும்தெரிவித்தார்.