நாம் ஒரே இனம் ஒரே தேசம் என்ற உணர்வோடு தொடர்ந்து செயற்பட முடியுமாக இருந்தால் எதிர்வரும் ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளே எமது மக்கள் கேட்டு நிற்கின்ற அரசியல் நீதியை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது 

என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா அரசியல் ரீதியான எமது உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே மாற்றுத்தலைமை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு யாழ்ப்பணத்தில் உள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தீவிலே கடந்த எழுபது வருடங்களாக தமிழ் மக்கள் தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர்.அரசியல் ரீதியான எமது உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.அந்த நிலைப்பாட்டில் உறுதியுடன் இந்த புதிய கூட்டணி உதயமாகின்றது.

எமது மக்கள் உரிமைகோரி நடத்தி வரும் போராட்டங்களிலே ஏராளமான உயிர் அழிவுகளை சொத்தழிவுகளை சந்தித்திருக்கின்றோம்.எமது மக்கள் நேர்மையான உறுதியான அர்ப்பணிப்புடன் பயணிக்கக் கூடிய ஓர் அரசியல் தலைமையை பெற்றுக்கொள்வதற்கு முயன்று வருகின்றது.

அந்த அடிப்படியில் அத்தகைய அரசியல் தலைமையை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக நாம் இந்த கூட்டணியை உருவகியுள்ளோம்.இந்த கூட்டணி அதற்காக சரியான பாதையில் அர்ப்பணிப்புடன் பயணிக்கும்.நாம் ஒரே இனம் ஒரே தேசம் என்ற உணர்வோடு தொடர்ந்து செயற்பட முடியுமாக இருந்தால் எதிர்வரும் ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளே எமது மக்கள் கேட்டு நிற்கின்ற அரசியல் நீதியை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

2001 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அப்போது இதே கருத்து இதே நிலைப்பாட்டில்தான் அன்று கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

அப்போது இதே போல புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.அன்று தமிழ் மக்கள் சார்பில் நான்கு அமைப்புக்கள் இதில் கையொப்பம் இட்டிருந்தன.நாம் அன்று எந்த உணர்வோடு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே அடிப்படியில் இந்த கூட்டணி மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எமது பயணம் மிகவும் கடினமானது.எமக்கு முன்பாக உள்ள பாதை கரடுமுரடானது.எமது மக்களின் எதிர்காலம் மிகவும் சவால்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது.

நாம் பல துன்பங்கள் சோகங்கள் கஷ்டங்கள் கொண்டது அதற்கும் மேலாக பல தியாகங்களை கொண்டது.நாம் விவேகத்துடன் துணிச்சலாக பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையோட்னேயே பயணிக்க ஆரம்பித்துள்ளோம்.என்றார்.