(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டுமாயின் அனைத்து  பங்காளி கட்சிகளின் ஆதரவு அவசியமாகும் எனத் தெரிவித்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, எத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கூட்டணி ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் பங்காளி கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட்டது.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  கூட்டணியில் பிரதான பங்கு வகிக்கின்றது. ஸ்ரீ  லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின்  தலைமைத்துவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கே வழங்கப்பட்டன.  

இதில் எவ்வித மாற்றமும் இனி ஏற்படாது. கூட்டணியின்  தலைமைத்துவம் என்றும் இவர்  வசமாகவே இருக்க வேண்டும் என்பது கட்சியின் ஏகமனதான தீர்மானமாகும். கட்சியின் மொட்டு சின்னமும் அவ்வாறானதே.

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தொடர்ந்து பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை  ஸ்தாபிப்பதே எமது பிரதான  எதிர்பார்ப்பாகும். 

பொதுத்தேர்தலை வழிநடத்தும் முழு பொறுப்பும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கூட்டணியமைத்தல் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் அமைக்கப்படும் என்பதே பிரதான எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.