காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி மனிதநேய மரபு நெறிகளுக்கு எதிரான செயல்களை அரசியல் குற்ற வரலாற்றில் புதைத்து விடுவதற்கு பதிலாக அனைத்து காணாமலாக்கல்கள் தொடர்பாகவும் வெளிப்படையாக விசாரணை நடத்தி அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை சமூகத்துக்கு வெளிப்படுத்துமாறு முன்னிலை சோசலிச கட்சி காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தோடு பொது மக்களின் வரிப்பணத்தினால் நடாத்திச் செல்லப்படும் நிறுவனம் என்ற வகையில் மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு பெரும் பொறுப்பு உண்டு என்பதை நினைவூட்ட விரும்புவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தில் இவ்விடயத்தை வலியுறுத்தி முன்னிலை சோசலிச கட்சி கையளித்துள்ள கடித்ததிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

கடந்த காலங்களில் விசேடமாக வடக்கு , கிழக்கு மாகாணங்களிலும் பொதுவாக முழு நாட்டிலும் ஆட்களை கடத்திச் செல்வதும் காணாமல் ஆக்கப்படுவதும் போன்ற சம்பவங்கள் நடைபெற்றமை குறித்து விசேடமாக சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அவை அனைவரும்  விடயமாகும்.

யுத்தத்தின் பின்னர் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம ஆணையம் சுமார் 25, 000 காணாமலாக்கள்களை கண்டறிந்துள்ளதோடு காணாமல் போனோர் பற்றிய நிறுவனமும் அவ்வாறான பல சம்பவங்கள் தொடர்பில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. வலிந்து காணாமலாக்கியமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப சுமார் 16, 000 பேர் காணாமல் போயுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் மதிப்பீடானது குறைந்த பட்சம் 20, 000 காணாமலாக்கல்கள் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறுகிறது.

காணாமலாக்கல் தொடர்பாக அரசாங்கத்துக்கு 18, 476 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எவ்வாறாயினும் பத்தாயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

சில காணாமலாக்கல்கள் யுத்த சூழ்நிலையிலும் , யுத்த களத்திலும் நடந்துள்ளன. மேலம் அநேக காணாமலாக்களுக்கு யுத்தத்தோடு தொடர்பு கிடையாது.

உதாரணமாக கொழும்பு மாளிகாவத்தை , மட்டக்குளி ஆகிய பகுதிகளை அண்மித்து இளைஞர்களை காணாமலாக்கியமை , ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் காணாமலாக்கப்பட்டமை மற்றும் யுத்த காலத்தில் பாதுகாப்புப் பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அல்லது பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டமை போன்றவற்றை குறிப்பிட முடியும்.

முன்னிலை சோசலிச கட்சியின் இரண்டு செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 டிசம்பர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் அதி பாதுகாப்பு வலயத்திலிருந்து தான்  கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதும் , யுத்தம் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் கடந்த நிலையில் காணாமலாக்கப்பட்டதும் , இந்த அனைத்து காணாமலாக்கல்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் விசாரணை நடத்தி அவர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த வேண்டும்  என அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.