அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் ஒர்லாண்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஓமர் மதீனின் (29 வயது) செத்திக் மதீன் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் எனவும் அவருக்கு தலிபான் தீவிரவாதிகள் ஆதரவு வழங்கி வந்ததாகவும் தகவல் வெ ளியாகியுள்ளது. 

அத்துடன் செத்திக் மதீன் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க வாஷிங்டன் நகரிலுள்ள பாராளுமன்றம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்திற்கு விஜயம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டில் அவர் அமெரிக்க வெளிநாட்டு விவகாரம் தொடர்பான சபையின் தலைவர் எட் ரோய்ஸ் உள்ளடங்கலாக முக்கியஸ்தர்களைச் சந்தித்துள்ளார். 

அதேசமயம் மதீனின் பெயரில் யூரியூப் இணையத்தளத்தில் வெளியடப்பட்ட காணொளிக் காட்சிகளில் ஒன்றில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தானை எழுச்சிபெறச் செய்வதை வலியுறுத்தியுள்ளார். 

பிறிதொரு காணொளிக் காட்சியில், "எமது சகோதரர்கள் வாஸிரிஸ்தானில் உள்ளனர். தலிபான் இயக்கத்திலுள்ள எமது சகோதரர்களும் தேசிய ஆப்கானும் எழுச்சி பெறுகின்றனர்" என அவர் தெரிவிக்கிறார். 

மேலும் ஒரு காணொளிக் காட்சியில் அவர் இராணுவ சீருடை அணிந்து காணப்படுகிறார். 

இந்நிலையில் இரவு விடுதியிலான துப்பாக்கிச் சூட்டையடுத்து ஓமர் மதீன் வசித்து வந்த இடத்திற்கு அருகிலிருந்த செத்திக்கின் வீட்டில் பொலிஸார் தேடுதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.