உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகளாவிய ரீதியில் சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனா உட்பட உலக நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 

சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. 

சீனாவில் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீனாவின் வைத்தியசாலைகள் எங்கும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  வுஹான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 81 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் கொரோனா வைரஸ் தாக்கியதில் சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 699 ஆக உயர்ந்துள்ளதாக சீன மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. அதேவேளை, உலக அளவில் இந்த நோயக்கு மொத்தம் 724 பேர் உயிரிழந்துள்ளனர். 

புதிய தரவுப்படி (வேல்ட் மீடர், நேரம் : காலை 10.33 ) கொரொனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 878 ஆகவும், இறப்பு  எண்ணிக்கை 724 ஆகவும், குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 2085 ஆகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. 

இதே வேளை சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே 27 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சுமார் 332 கொரோனா வைரஸ் நோயாளகள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் ஹொங்கொங், பிலிப்பைன்ஸில் இரு இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

2002-2003 ஆம் ஆண்டில் சார்ஸ் காரணமாக உலகளவில் பதிவான 774 இறப்பை கொரோனா வைரஸ் மிஞ்சியுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

அத்துடன் சீனா முழுவதும், குணமடைந்தவர்கள் 2,050 பேரையும், இறந்தவர்களையும் தவிர்த்து, இனங்காணப்பட்ட நோயாளர்களின்  எண்ணிக்கை 31,774 ஆக உள்ளது.

சீனாவில் முககவசம் பற்றாக்குறை நிலவுகின்றமை நோய்தொற்றறு மேலும் அதிகரிக்க முக்கிய காரணமாக அமையும் என சுகாதார வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் தினசரி எண்ணிக்கை

வியாழக்கிழமை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் தினசரி எண்ணிக்கையில் முதல் தடவையாக வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளதாக  உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது. 

இறப்பு  சுமார் 2% ஆக இருப்பதாகத் தோன்றினாலும், பரிசோதிக்கப்படாத பல நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவே இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா உளகலாவிய தாக்கங்கள்..

ஜனவரி 25 ஆம் திகதி  டயமண்ட் இளவரசி  என்ற கப்பலில் இறங்கிய ஒருவருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டதையடுத்து  ஜப்பானில்,  3,700 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குறித்த கப்பல் யோகோகாமா பகுதியில் கடலில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுவருகின்றது. 

இது வரை குறித்த கப்பலில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்  உறுதி செய்யப்பட்டதையடுத்து ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உளகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

30 - சிங்கப்பூர், 26 - ஹொங்கொங், 25 - தாய்லாந்து, 24 -  தென்கொரியா, 16 - தாய்வான் , 15 ஆவுஸ்திரேலியா, 13 - ஜேர்மனி, 12 - அமெரிக்கா, 12 - மலேசியா, 10 - வியட்நாம், 10 - மக்காவு, 7 - கனடா,  6 -பிரான்ஸ், 5 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 3 - இத்தாலி, பிலிப்பைன்ஸ், இந்தியா, யுகே, 2 - ரஷ்யா, 1 - நேபாளம், கம்போடியா, பெல்ஜியம், ஸ்பெயின், பின்லாந்து, ஸ்வீடன், இலங்கை.