சீனாவில் கொரோனா வைரஸ் பற்றி முதன்முதலில் அபாய அறிவிப்பு செய்தமைக்காக தண்டிக்கப்பட்ட சீன வைத்தியர் மரணம் அடைந்ததையடுத்து சீன மக்கள் மத்தியில் பெரும் சீற்றமும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கான கோரிக்கையும் சாதாரண மக்கள் மத்தியிலிருந்து பரவலாக கிளம்பியிருக்கிறது.

லீ வென்லியாங் என்ற 34 வயதுடைய அந்த வைத்தியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிய போது அதன் தொற்றுக்கு இலக்காகியிருந்தார். இன்று அதிகாலை அவர் மரணமடைந்ததாக அவர் பணியாற்றிய வூஹான் மத்திய வைத்தியசாலை அறிக்கையொன்றில் தெரிவித்தது. 

கொரோனா வைரஸ் தொற்று கொள்ளை நோயாக மாறக்கூடிய மர்மமான வைரஸ் ஒன்று பற்றி கடந்த டிசெம்பர் மாத பிற்பகுதியில் வைத்தியர் லீ தனது சகாக்களை சமூக ஊடகம் வாயிலாக எச்சரிக்கை செய்திருந்தார்.

அதையடுத்து அவர் பொய் வதந்திகளை பரப்புவதாகக் குற்றஞ்சாட்டி பொலிஸார் அவரை ஜனவரி மூன்றாம் திகதி வூஹானில் தடுத்து வைத்தனர். சட்டத்தை மீறியதாகவும் சமூக ஒழுங்கை பாரதூரமான வகையில் சீர்குலைத்ததாகவும் ஒத்துக்கொண்டு பொலிஸ் ஆவணமொன்றில் கைச்சாத்திடுமாறு அவர் பலவந்தப்படுத்தப்பட்டார்.

'உங்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். உங்களுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.' என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தினசரி என்ற பத்திரிகை அதன் வெளிநாட்டு பதிப்பில் வெளியிட்ட கருத்து சீன சமூக ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

'நல்லவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை. ஆனால், கெட்டவர்கள் ஓராயிரம் வருடங்களுக்கு வாழ்கிறார்கள்' என்று லீயின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி இன்னொரு சமூக ஊடகப் பதிவு தெரிவித்திருக்கிறது. பெய்ஜிங்கில் ஆற்றங்கரையொன்றில் பனிப்படிவத்தின் மீது செதுக்கப்பட்ட 'லீ வென்லியாங்கிற்கு பிரியாவிடை' என்ற செய்தி காணப்படுகிறது. இதுவும் பரவலாக சீன சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆட்கொல்லி வைரஸ் தொற்று நெருக்கடியை ஆரம்பத்தில் மூடி மறைப்பதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளை அறிந்து சீனா பூராவும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் ஆவேசத்தையும் விரக்தியையும் வைத்தியர் லீயின் மரணம் மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. தங்கள் உணர்வுகளை வலுப்படுத்தி மக்கள் வெளியிடும் பதிவுகளால் சீனாவின் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.

மக்கள் வெளிக்காட்டிய கடுமையான பிரதிபலிப்பு சீன உயர் மட்டத் தலைமைத்துவத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சீன கம்யூனிஸ்ட கட்சியின் பலம் பொருந்திய ஊழல் தடுப்பு அமைப்பான ஒழுங்கு கட்டுப்பாடு மேற்பார்வைக்கான மத்திய ஆணைக்குழு, நாட்டின் மிகப் பெரிய ஊழல் தடுப்பு நிறுவனமான தேசிய கண்காணிப்பு ஆணைக்குழு ஆகியவை அவற்றின் கூட்டு இணையத்தளத்தில் 'வைத்தியர் லீ வென்லியாங்கின் மரணம் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கவலை தொடர்பாக தோன்றியிருக்கும் பிரச்சினைகளை விரிவான முறையில் விசாரணை செய்வதற்கு வூஹானுக்கு விசாரணையாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.' என்று ஒரேயொரு வசனத்தில் பதிவு செய்திருக்கின்றன.

லீயின் மரணம் தொடர்பாக கொண்டிருக்கும் கொந்தளிப்பு வீதிகளுக்கு பரவக்கூடும் என அஞ்சிய சீன அரசாங்கம் அவரது மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரும் சமூக ஊடக பதிவுகளை நீக்கியிருக்கிறது. 'லீ வென்லியாங்கின் படத்தை ஏந்திய வண்ணம் நாம் ஒருநாள் வீதியில் இறங்கலாம் என்று நம்புகிறேன்.' என்று ஒரு பதிவில் கூறப்பட்டிருந்தது. அதுவும் நீக்கப்பட்டுள்ளது.

'மருத்துவ பரிசோதனை முடிவுகள் எனக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக உறுதிப்படுத்துகின்றன.' என்று டுவிட்டரைப் போன்ற சீன சமூக ஊடகமான வீயீபோவில் பெப்ரவரி 1ஆம் திகதி இறுதியாக வைத்தியர் லீ பதிவொன்றை செய்திருந்தார்.

வைத்தியர் லீயின் பெற்றோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது மனைவியினதும் பிள்ளைகளினதும் நிலவரம் பற்றி எதுவும் தெளிவாக தெரியவில்லை. அவரது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார்.

 (த கார்டியன்)