(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதன வைத்தியசாலையில் தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குருணாகல் போதன வைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் வீட்டின் சி.சி.ரி.வி. கமரா காணொளிகளை பதிவு செய்யும் டி.ஆர்.வி. உபகரணத்தை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப இன்று குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டார். 

குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர்  விஜித்த பெரேரா முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை முதலில் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் குற்றயவியல் பொறுப்பதிகாரியே கைது செய்துள்ளார். அப்போது அவரால் வைத்தியர் ஷாபியின் வீட்டில் இருந்து சி.சி.ரி.வி. காணொளிகள் பதிவாகும் டீ.வி.ஆர் உபகரணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பின்னர் அது மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அது முன்னைய விசாரணை அதிகாரிகளால் சந்தேகநபருக்கு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் அந்த டீ.வி.ஆர் உபகரணம்  புதிய விசாரணைகளுக்கு அவசியம் என்பதால் அதனை சி.ஐ.டி.யிடம் மீள ஒப்படைக்க கடந்த ஜனவரி 12 ஆம் திகதி நீதிமன்றால் உத்தரவிடப்பட்டது. 

அதன்படி கடந்த ஜனவரி 20  ஆம் திகதிக்கு முன்னர் அந்த டி. ஆர்.வி. உபகரணம் சி.ஐ.டி.யில் ஒப்படைக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று குறித்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்த சி.ஐ.டி. சார்பில் விசாரணை அதிகாரியான உதவி பொலிஸ் அத்தியட்சகர் விஜித்த பெரேரா மற்றும் கான்ஸ்டபிள் சில்வா ஆகியோர் மன்றுக்கு விடயங்களை தெளிவுபடுத்தினர்.