(லியோ நிரோஷ தர்ஷன்)

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கைக்கு முழு அளவில் அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கும். அதே போன்று உள்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கைக்கான அனைத்து அமெரிக்க திட்டங்களிலும் தொடர்ந்தும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடமை பேணப்படும் என அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை உதவி செயலர் ஜோனோதன் ஹெனிக் தெரிவித்தார்.

இலங்கை - அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட கால இலக்குகளை அடைய பொது திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை உதவி செயலர் ஜோனோதன் ஹெனிக் இன்று ஊடகவியலாளர்களை கொழும்பில் சந்தித்து விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,  

முதன்மை துணை இராஜாங்க செயலாளர் அலஸ் வெல்ஸின் விஜயத்தைத் தொடர்ந்து எனது இலங்கைக்கான விஜயம் இடம்பெற்றுள்ளது.

துணை உதவி இராஜாங்க செயலாளர் என்ற வகையில் ஊடகத்துறை மற்றும் பொது இராஜாங்க திட்டங்களுக்கு நான் பொறுப்பு வைகிக்கின்றேன். சுருக்கமாகக் கூறுவதானால் அமெரிக்க மற்றும் இலங்கை மக்களின் உறவை மேலும் நெருக்கமாகக் கொண்டு வருவதே எனது பணியாகும். 

அதாவது புலமை பரிசில் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கல்வியின் ஊடாக இதனை முன்னெடுத்து வருகின்றோம். உலகலாவிய ஊடக செயற்பாட்டாளர்கள் போன்ற கலாசார திட்டங்களின் ஊடாகவும் நாங்கள் இதனை முன்னெடுக்கின்றோம். 

முக்கியமாக கொழும்பில் உள்ள அமெரிக்க மையத்தின் ஊடாக இதனை செயற்படுத்தி வருகின்றோம். இலங்கையில் ஏனைய இடங்களில் உள்ள 3 அமெரிக்க மையங்களின் ஊடாக ஆங்கில கற்கை நெறியையும் திறமைகளை மேலும் வளர்க்க உதவி வருகின்றோம்.

அமெரிக்க மையங்களின் ஊடாக அமெரிக்காவைப் பற்றி மேலும் புரிந்து கொள்ளலை மேம்படுத்துவதுடன் தலைமைத்துவ தொழிலதிபர் வகுப்புக்களையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். 

இத்திட்டம் இலங்கையர்களையும் அமெரிக்கர்களையும் மேலும் நெருக்கமாகக் கொண்டு வர உதவும் என நான் நம்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.