(எம்.ஆர்.எம்.வஸீம்)

எயார் பஸ் கொள்வனவில் இடம்பெற்றுள்ள மோசடிகள் நிரூபணமானால் எதிர்காலத்தில் எயார் பஸ்களை இந்த நிறுவனங்களில் இருந்து எம்மால் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அத்துடன் கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான தகவல்கள் கடந்த நவம்பர் மாதம் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் பின்னரான நடவடிக்கைகள் எமக்கு தெரியாது என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எயார் பஸ் கொள்வனவு தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

.அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 

எயார் பஸ் கொள்வனவு தொடர்பான அறிக்கையை 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரிடம் நாம் கோரியிருந்த போதிலும் முதலாவது அறிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம்7ஆம் தகதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு தெரியாது .  இதுதொடர்பில் எமக்கு தகவல்கள் இருக்கவில்லை. என்றாலும் குற்றப்புலனாய்வு பிரிவில் தகவல்கள் இருந்துள்ளன. இத்தகவல்களை ‘ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டெர்னெஷனல் சிறிலங்கா’ ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.

அத்துடன் தரவுகளின் பிரகாரம் சிங்கப்பூர் மற்றும் சம்மந்தப்பட்ட நாடுகளில் இதுதொடர்பிலான தகவல்களை கோரினோம். சிங்கப்பூரில் குறித்த நிறுவனத்தின் பெயர் இருந்த போதிலும் அதன் உரிமையாளர் யாரென குறிப்பிடப்பட்டிக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் இந்த தகவல்கள் இலங்கைக்கு சிங்கப்பூரிலிருந்து அனுப்பப்பட்டன. அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதென எமக்குத் தெரியாது என அவர் தெரிவித்தார்.